சென்னை, மார்ச் 2, 2026: அதிமுக–பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்பதே தெரியாமல் உள்ளார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதே சமயம், பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் ஆங்கில வார இதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அனைத்து துறைகளிலும் ஆல்ரவுண்டராக உயர்ந்திருக்கிறோம். அனைத்து பகுதிகளிலும் பரவலான, சமச்சீரான, எல்லோருக்குமான வளர்ச்சியை திராவிட மாடல் ஆட்சியில் சாதித்து காட்டியிருக்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சியில் சாதனைகள் பட்டியலிட்ட முதல்வர்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் புதிய தொழில் முதலீடுகள் மூலம் முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்புகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் பெரிய மேம்பாலங்கள், பல்வேறு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. கிராம சாலைகளையும் மேம்படுத்தி வருகிறோம். இவ்வாறு ஆல்ரவுண்டராக செயல்படுவதால்தான் இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. இதை மத்திய பாரதிய ஜனதா அரசு பாராட்டியுள்ளது. நம்பர் ஒன் மாநிலம் மட்டுமல்லாமல், இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய 11 மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
மேலும் படிக்க: இங்கெல்லாம் பட்டம் விட்டால் ஜெயிலுக்கு செல்வது உறுதி… எச்சரிக்கை…!
பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்லாமல், மனித மேம்பாட்டு குறியீட்டிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.
பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன சாதனை செய்துள்ளார்கள்?
இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் ‘டபுள் என்ஜின்’ என்று அவர்கள் கூறும் மாநிலங்களில் இப்படியான வளர்ச்சியை காட்ட முடியுமா? அவர்கள் செய்வது வன்முறை, வெறுப்பு, பிரிவினைவாத அரசியல் மட்டுமே. அதற்கு நேர்மாறாக, எங்கள் திராவிட மாடல் அரசு முற்போக்கு வளர்ச்சியை கொண்டு வந்துள்ளது. முக்கியமாக, நாங்கள் செய்த சாதனைகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதித்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், “மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, மதுரவாயல்–துறைமுகம் மேம்பால பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டிப் பேசியுள்ளார். அவர் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகதான் இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தது. திமுக அரசு வந்த பிறகுதான் மத்திய அரசிடம் வலியுறுத்தி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் உள்ளனர்:
பழனிசாமி அதிமுக ஆட்சி அமைக்கும் என்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் இந்த கூட்டணி உள்ளது. இதனால் தான் இந்த தேர்தல் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற நிலை உருவாகியுள்ளது. நிச்சயம் தமிழ்நாடு அணி வெல்லும். திராவிட மாடல் 2.0 மூலம் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிப்போம்” என்றார்.
மேலும் படிக்க: 2026 தேர்தலை நோக்கி ஆயிரம் விளக்கு தொகுதி.. திமுகவின் கோட்டை தொடருமா?
பிரதமர் மோடி காணும் கனவும் வெறும் கானல் நீர் தான்:
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக கூட்டணி எண்ணிக்கையில் அமைந்த கூட்டணி அல்ல; எண்ணத்தில் உருவான கூட்டணி. தமிழ்நாட்டில் இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய அனைத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைந்துள்ளன; மேலும் இணையும். இதை நான் சவாலாக கருதவில்லை. இதை கொள்கைக் கூட்டணியாகவே கொண்டு செல்கிறோம். மோடியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே அவரின் கனவு. அது கானல் நீராகவே உள்ளது; அவர் கூறுவது போல நடக்காது” என பதிலளித்தார்.