மேகதாது அணைக்கு செக்.. முக்கிய பைலுடன் டெல்லி விரையும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
CM Vijay Travel To Delhi : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கருத்தை வலியுறுத்துவதற்காக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நவம்பர் 16- இல் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நவம்பர் 16- ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை உறுதியாக கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன், அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று கர்நாடக மாநிலத்திற்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் டி. கே. சிவகுமார் நேரடியாக கோரிக்கை வைத்திருந்தார். இதில், அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
முதல்வர் விஜய் திடீர் டெல்லி பயணம்
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன், அணை கட்டுவதற்கு மத்திய அரசு முதல் வழங்கக்கூடாது என்று எதிர்ப்புக் குரல்களும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகிற திங்கட்கிழமை நவம்பர் 16- ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை டெல்லி செல்லும் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வலியுறுத்த உள்ளார்.
மேலும் படிக்க: 6 அடி கழிவறை.. 5.5 அடி நபர்.. எப்படி தூக்கிட்டு தொங்கியிருக்க முடியும்.. மதுரை லாக்கப் மரணத்தில் வழக்கறிஞர் கேள்வி!




மேகதாது அணையால் ஏற்படும் பாதிப்பு குறித்த அறிக்கை
இதில், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று முதல்வர் விஜய் வலியுறுத்த இருப்பதாகவும் தெரிகிறது. அத்துடன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெளியிடும் புத்தக நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கெனவே, முதல்வரான பின்னர் முதல் முறை விஜய் டெல்லி சென்றிருந்தார்.
3- ஆவது முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்
அப்போது, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துவிட்டு திரும்பினார். இதைத் தொடர்ந்து, 2- ஆவது முறை டெல்லி சென்ற விஜய் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்திருந்தார். இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக 3- ஆவது முறை முதல்வர் விஜய் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பூமிக்கு அடியில் பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. தவெக நிர்வாகி வீட்டில் அதிரடி சோதனை.. தோண்டி துளாவிய புலனாய்வு அதிகாரிகள்!