ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாகவே வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடையிலான வீரர்கள் பரிமாற்றம் குறித்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தையே பிடித்தது. 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பிய ஹர்திக், ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது தலைமையில் மும்பை அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் அர்ஷ்தீப் சிங். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 96 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது எகானமி 9.18 ஆக உள்ளது. பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் திறன் கொண்ட அர்ஷ்தீப், பும்ராவுடன் இணைந்தால் மும்பை அணியின் பந்துவீச்சுப் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின்படி, இரு அணிகளும் இந்த வீரர்கள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. இருப்பினும், வீரர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆக, ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து வெளியேறுகிறாரா? அர்ஷ்தீப் சிங் மும்பை அணியின் புதிய வேகப்பந்து வீச்சு ஆயுதமாக மாறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது