வங்கக் கடல் புயல் சின்னம்.. தமிழகத்தை புரட்டி போடப்போகிறதா? களமிறங்கிய கடலோர காவல் படை!
Indian Coast Guard Alert : வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ள நிலையில், கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், துறைமுகம் மற்றும் கப்பல்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன .
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ள நிலையில், இந்திய கடலோர காவல்படை தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடலோர காவல்படை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 13- ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கடலோர காவல் படை, கிழக்கு கடற்கரை பகுதியில் தயார் நிலையில் உள்ளது. மாறிவரும் வானிலை சூழல்களில், மக்களின் உயிரைக் காக்கவும், உடைமைகளை காக்கவும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் மற்றும் வானூர்திகள் எந்த நேரத்திலும் செயலாற்றக்கூடிய வகையில் தயார் நிலையில் உள்ளது.
வானிலை அமைப்பு தொடர் கண்காணிப்பு
அத்துடன் கடலோர காவல் படையின் ரேடார் நிலையங்கள், உருவாகி வரும் இந்த வானிலை அமைப்பை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. மேலும், கடலில் மீனவர்கள், வணிக கப்பல்கள் மற்றும் பிற கடல் பயணிகளுக்கு தகுந்த நேரத்தில் வானிலை எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்க கடல் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பல்வேறு இடங்களில் உள்ள தொலைநிலை செயல்பாட்டு நிலையங்கள், உரிய தகவல்கள் உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பிராந்திய மொழிகளில் வானிலை எச்சரிக்கைகளை ஒலிபரப்பு வருகின்றன.




நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
அதில், அலைவரிசை கருவிகள் மூலமாக ஆலோசனைகளும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. கடலில் நங்கூரம் இட்டுள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதிகளில் அவசரகால சூழல்களை கையாள்வதற்கு இந்திய கடலோர காவல் படையின் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய கடலோர காவல் படை தயார் நிலை
அவசியம் ஏற்படும் பட்சத்தில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், இந்திய கடலோர காவல் படையின் அனைத்து கப்பல்களும், விமானங்களும் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படை, சிவில் நிர்வாகம், துறைமுக அதிகாரிகள் மற்றும் பிற கடல்சார் பங்குதாரர்களுடன் அதிகமான ஒருங்கிணைப்பை பேணப்பட்டு வருகிறது. இதில், அவசர சூழல் ஏற்பட்டால், விரைவாகவும், திறம்படவும் பதிலளிக்க இந்திய கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் மனித முகம் போன்ற வடிவத்துடன் கண்டறியப்பட்ட விசித்திர பூச்சி.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்!!