திருச்செந்தூர் சூரசம்ஹார விழா – சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை – காவல்துறை கடும் எச்சரிக்கை
Tiruchendur Soorasamharam Police Warning : திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சாதி ரீதியான அடையாளங்களை கொண்ட உடைகள், தொப்பிகள், கொடிகள் உள்ளிட்டவற்றுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி, நவம்பர் 14 : கந்த சஷ்டியின் ஒரு பகுதியாக திருச்செந்தூரில் (Tiruchendur) நவம்பர் 15, 2026 நாளை சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு காவல்துறை எச்சரிக்கை
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்வுகளுக்கு சாதி ரீதியான கோஷங்கள், பாடல்கள் மற்றும் வசனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்ப்பக் காவடி எடுத்து வருவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் நிகழ்வுகளுக்கு சாதி ரீதியிலான அடையாளங்களுடன் யாரும் வரக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : கோவையில் மனித முகம் போன்ற வடிவத்துடன் கண்டறியப்பட்ட விசித்திர பூச்சி.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்!!




திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் 4,100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் அவசரத் தேவைகளுக்காகவும், தகவல்களைப் பெறுவதற்காகவும் ஆங்காங்கே காவல்துறை உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த நவம்பர் 10, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 15, 2026 அன்றும், திருக்கல்யாண நிகழ்வு நவம்பர் 16, 2026 அன்றும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதனை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடுவதால் சில சமயங்களில் பக்தர்களிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சில நேரங்களில் சாதி ரீதியான மோதல்களும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை
இதனையடுத்து கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்களைக் கொண்ட உடைகள், தொப்பிகள், கொடிகள் மற்றும் ரிப்பன்களை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : மதுரையில் காவல் நிலைய மரணம்.. புகாரளிக்க வந்தவர் சடலமாக மீட்பு.. ஆய்வாளர் உட்பட காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்.. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!!
மேலும், சாதி ரீதியான கோஷங்கள், பாடல்கள் மற்றும் வசனங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்ப்பக் காவடி எடுத்து வருவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை. சூரசம்ஹார நிகழ்வின்போது கடற்கரைப் பகுதிக்குள் காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் சூரசம்ஹார நிகழ்வை எளிதாக காணும் வகையில் கடற்கரைப் பகுதியில் 26 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்வு ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொது அமைதிக்கும், ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.