வரலாற்று உச்சத்தில் சென்னையின் மின் தேவை.. 5,000 மெகாவாட்டைத் தாண்டியது.. இந்தியாவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை!
இதற்கு முந்தைய புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி, சென்னையின் உச்சபட்ச மின் தேவை 4,809 மெகாவாட் ஆக இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு மே 31ம் தேதி பதிவான 4,769 மெகாவாட் என்பதே அதற்கு முந்தைய உச்சமாக இருந்தது. தற்போது இந்த முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.
சென்னை, ஜுன் 11: சென்னையில் நிலவி வரும் கடுமையான கோடை வெப்பத்தின் காரணமாக, மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து, சென்னை மாநகர மின் நுகர்வு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குக் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தினசரி அதிகபட்ச மின் நுகர்வு கொண்ட பெருநகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பநிலை நிலவியது. இதன் காரணமாக, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குளிரூட்டிகள் மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது.
இதையும் படிக்க: “21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது”.. மனமகிழ் மன்றம், மதுபார்களுக்கு அரசு கட்டுப்பாடு!!
5,000 மெகாவாட்டைத் தாண்டிய மின் தேவை:
இதன் விளைவாக, சென்னையின் ஒட்டுமொத்த மின் தேவை நேற்று 5,008 மெகாவாட் (MW) ஆகப் பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளதாகத் தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநகரங்களின் உச்சபட்ச மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது, சென்னை மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
சென்னை இரண்டாமிடம்:
இந்தியாவின் பெருநகரங்களிலேயே மிக அதிகபட்சமாக டெல்லியில் தினசரி மின் நுகர்வு 8,656 மெகாவாட் ஆகப் பதிவாகியுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து தற்போது சென்னை 5,008 மெகாவாட் மின் நுகர்வுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஜூன் 8-ஆம் தேதி நிலவரப்படி, மும்பை மாநகரத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 4,608 மெகாவாட் ஆக மட்டுமே பதிவாகி இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் முந்தைய மின் நுகர்வு நிலவரம்:
இதற்கு முந்தைய புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி, சென்னையின் உச்சபட்ச மின் தேவை 4,809 மெகாவாட் ஆக இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு மே 31ம் தேதி பதிவான 4,769 மெகாவாட் என்பதே அதற்கு முந்தைய உச்சமாக இருந்தது. தற்போது இந்த முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!
மின்வாரியம் விரைந்து நடவடிக்கை
ஒரே நேரத்தில் மின்சாரப் பயன்பாடு வரலாறு காணாத அளவில் அதிகரித்ததால், சென்னையின் பல இடங்களில் மின்மாற்றிகள் மற்றும் மின் கேபிள்கள் அதிக வெப்பமடைந்து பழுதடைந்தன. மாநகர மற்றும் புறநகர்ப் பகுதிகளான புதுப்பேட்டை, வடபழனி, ஏழு கிணறு, அத்திப்பட்டு, ராஜகீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிகப்படியான மின் நுகர்வால் மின்தடை ஏற்பட்டது. எனினும், மின்வாரிய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, பழுதடைந்த மின்மாற்றிகள் மற்றும் கேபிள்களைச் சரிசெய்து மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.