AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

Tamil Nadu Weather: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Jul 2026 06:39 AM IST

ஜூலை 24, 2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மற்றும் வேலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிகபட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.1 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 38 டிகிரி செல்சியஸ், நாகையில் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் இயல்பை விட 4.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:

இது ஒருபுறம் இருக்க, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றோட்டத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூலை 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்.. கோவையில் 3 மாணவிகள் மீது பாய்ந்த டிப்பர் லாரி.. ஒரு மாணவி கொடூர பலி!

அதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்:

இந்த நிலைமை ஜூலை 29ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: லாக்கப் மரணம்.. உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us