ஆட்சியமைக்கும் எந்த கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது – வெளியான பரபரப்பு அறிக்கை
BJP Tamil Nadu : தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் நேரடிப் பங்களிப்பை பாஜக மேற்கொள்ள விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆட்சியமைக்க தவெக அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி வரும் நிலையில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கறது.
சென்னை, மே 8 : தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் பாஜக வாக்களிக்காது. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் நேரடிப் பங்களிப்பை பாஜக மேற்கொள்ள விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையான 118 எம்எல்ஏகளின் ஆதரவு இல்லை என ஆளுநர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெகவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் தவெக தற்போது விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது. மற்றொரு பக்கம் திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளும் தங்களது எம்எல்ஏகளை சென்னையில் தங்கை வைத்துள்ளன.
இதையும் படிக்க : தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் – காங்கிரஸ் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு பாஜக சார்பில் வெளியான பரபரப்பு அறிக்கை
நமது மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் அறிவிக்கை.. pic.twitter.com/rLJ5SSvHDM
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 8, 2026
இதற்கிடையில் தமிழ்நாடு பாஜக சார்பில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாஜக, அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது இருப்பினும் தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும். தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.
இதையும் படிக்க : அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?
எனவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது. தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியமைப்பதற்காக அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி வரும் நிலையில் தமிழக பாஜக தரப்பில் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியாகியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.