மே 8, 2026: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தற்போது வரை ஆட்சி அமைக்க ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இரண்டு முறை நேரில் சந்தித்தும், ஆளுநர் தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லை. இதைத் தொடர்ந்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைவரும் ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: “இபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்”.. பொறுத்திருந்து பாருங்கள்.. பரபரப்பை கிளப்பிய தம்பிதுரை
ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்:
இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகத்துடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும்:
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோலங்கி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக்கழகத்தை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் படிக்க: அதிமுகவுக்கு திமுக விதித்த நிபந்தனை?.. ‘வரலாற்றுச் சமரசம்’ ஏற்பட வாய்ப்பு?
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.