AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தருமபுரி சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் குற்றவாளிக்கு எதிராகப் பலத்த சாட்சிகளும், அறிவியல் பூர்வமான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

தருமபுரி சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Jun 2026 07:28 AM IST

தருமபுரி, ஜுன் 24: தருமபுரி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தருமபுரி போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காட்டம்பாட்டி கிராமத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுவன் மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனான்.பதறிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

மறுநாள் ஜூலை 18 அன்று மாலை, அப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் உள்ளே இருந்து சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். அவனது கைகால்கள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன. இச்சம்பவம் அந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

மேலும் படிக்க: தவெக ஆட்சி அமைக்க யார் யாரை தொடர்பு கொண்டீர்கள்.. பட்டியலை வெளியிடட்டுமா? நயினார் நாகேந்திரன் சவால்!

விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்:

இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சிறுவன் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த அவனது உறவினரான பிரகாஷ் என்ற 22 வயது இளைஞனுடன் விளையாடிக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்ததாகத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பிரகாஷைப் பிடித்து காவல் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பிரகாஷ் அவனை ஆள் நடமாட்டமில்லாத அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளான். தொட்டியின் மேல் பகுதியில் வைத்து சிறுவனின் வாயைப் பொத்தி, கைகால்களைக் கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்

போக்சோவில் அதிரடி கைது:

பின்னர், இந்த விவகாரத்தைச் சிறுவன் வீட்டில் கூறிவிடுவான் என்ற பயத்தில், அவனது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைத் தொட்டிக்குள்ளேயே வீசிவிட்டுத் தப்பியோடியதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து பிரகாஷ் மீது போக்சோ சட்டம், கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் அவனை கைது செய்தனர்

வழக்கில் உறுதியான சாட்சியங்கள்:

இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் குற்றவாளிக்கு எதிராகப் பலத்த சாட்சிகளும், அறிவியல் பூர்வமான ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக, சிறுவனுடன் குற்றவாளி கடைசியாக நடந்து சென்றதைக் கண்ட நேரில் பார்த்த சாட்சிகள், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் தடய அறிவியல் சான்றுகளை நீதிமன்றத்தில் வலுவாக முன்வைத்தனர். அதேசமயம், குற்றவாளி பிரகாஷ் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு:

அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அசின் பானு நேற்று (ஜுன் 23) வழங்கினார். அப்போது,பச்சிளம் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி சமுதாயத்தில் மிகக் கொடூரமான குற்றம் எனக் குறிப்பிட்டார். இதற்காகக் குற்றவாளி பிரகாஷுக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக ஒரு தூக்கு தண்டனையும், ₹20,000 அபராதமும், கொலை குற்றத்திற்காக மற்றொரு தூக்கு தண்டனையும் (இரட்டை தூக்கு தண்டனை), ₹20,000 அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், சிறுவனைக் கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க: முதல்வரின் தனி செயலர் நியமனத்தில் வெடித்த சர்ச்சை.. தவெக ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை.. அரசாணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தை!

7 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us