கடலூரில் 35,647 கோழிகள் உயிரிழப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம் – கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்
Bird Flu Confirmed at Cuddalore Poultry Farm : கடலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் கோழி பண்ணைகளில் திடீரென 35,647 கோழிகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பறவைக் காய்ச்சல் தான் காரணம் என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னை, நவம்பர் 14 : கடலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் கோழி பண்ணைகளில் திடீரென 35,647 கோழிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோழிகள் திடீர் உயிரிழப்புக்கு பறவை காய்ச்சலே (Bird Flu ) காரணம் என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து 1 கி.மீ. சுற்றளவில் கோழிகளை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி வட்டம் கட்டியன்குப்பம் என்ற கிராமத்திலுள்ள கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் (H5N1) பாதிப்பு இருப்பது நவம்பர் 13, 2026 நேற்று ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : திருச்செந்தூர் சூரசம்ஹார விழா – சாதி ரீதியான அடையாளங்களுக்கு தடை – காவல்துறை கடும் எச்சரிக்கை




பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் உயிரிழப்பு
கடந்த அக்டோபர் 30, 2026 அன்று, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தியாகவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட தாமனம்பட்டி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் திடீரென கோழிகள் உயிரிழப்பதாகத் தகவல் கிடைத்தது.இதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாக பாதிக்கப்பட்ட பண்ணைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட கோழிகளிடமிருந்து உரிய மாதிரிகளைச் சேகரித்தனர். அந்த மாதிரிகள் ஆய்வுக்காக நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, அருகிலுள்ள கோழிப் பண்ணைகளிலும் கோழிகள் அதிக அளவில் உயிரிழப்பதாகத் தகவல் கிடைத்தது. கடந்த நவம்பர் 13,2026 அன்று கிடைத்த தகவலின் படி மொத்தம் 35,647 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
உயிரிழந்த கோழிகள் அனைத்தும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அறிவியல் முறையில் ஆழமாகப் புதைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் நாமக்கல்லில் உள்ள கோழி நோய் கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் சென்னை மாதவரத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் கோழியின் உடல் மாதிரி கூடுதல் ஆய்வுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பறவைக் காய்ச்சல் (H5N1) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க : ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பு.. கற்பழித்து கொலையா? ஜேசிபி மூலம் தோண்டும் பணி தீவிரம்!
கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்
பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பண்ணை மற்றும் அதன் மையப்பகுதியிலிருந்து 1 கி.மீ. சுற்றளவில் உள்ள கோழிகளை மனிதாபிமான முறையில் அழிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அழிக்கப்படும் கோழிகள் அனைத்தும் அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆழமான குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன.