வண்டலூர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி – பூங்கா அடுத்த 2 நாட்களுக்கு மூடல்
Bird Flu Confirmed at Chennai Vandalur Zoo : வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (Vandalur Zoo) உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்கள் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 21 : வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (Vandalur Zoo) உள்ள நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அக்டோபர் 21, 2026 நாளைமற்றும் அக்டோபர் 23, 2026 ஆகிய இரண்டு நாட்களுக்குப் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனப் பூங்கா இயக்குநர் அறிவித்துள்ளார்.
வண்டலூர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி
இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்தின் (NIHSAD) ஆய்வறிக்கை மூலம், வண்டலூர் உயிரியல் பூங்காவின் நீர்வாழ் பறவைகளுக்கு H5N1 தொற்று இருப்பது அக்டோபர் 21, 2026 இன்று உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பூங்காவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறவைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. உயிரினங்கள் பாதுகாப்பு நடைமுறைகளும் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : புயலாக மாற வாய்ப்பு…. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மைய இயக்குநர் தகவல்




கடந்த அக்டோபர் 9, 2026 முதல் இதுவரை, பூங்காவில் உள்ள பறவைகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரண்டு நாள் மூடல் தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், பூங்கா முழுவதும் தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது. பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடியான, நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கே அந்த ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எனினும், இறந்து கிடக்கும் பறவைகளைக் கண்டால் அவற்றைக் கைகளால் தொடாமல், உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தின் தமிழக-ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிக்க : ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் – தமிழக வீரர் சிவராஜனுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு
ஆந்திர மாநிலத்திலிருந்து திருப்பத்தூா் மாவட்டத்துக்குள் கோழிகள், முட்டைகள், பண்ணைக் கழிவுகள் மற்றும் பிற பறவை இனங்களின் இறைச்சியை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் கோழித் தீவனம் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் காலியாக கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டன. இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.