ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் – தமிழக வீரர் சிவராஜனுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு
CM Vijay Announces Reward : ஜப்பானில் நடைபெற்று வரும் 5ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சிவராஜனுக்கு தமிழக முதல்வர் விஜய், ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
சென்னை, அக்டோபர் 21: ஜப்பானில் நடைபெற்று வரும் 5ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சிவராஜன் சோலைமலையை பாராட்டியுள்ள தமிழக முதல்வர் விஜய், அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழக வீரருக்கு முதல்வர் விஜய் பாராட்டு
இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சிவராஜன் சோலைமலைக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் சிவராஜனின் இந்தச் சாதனை, அவரது கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.




இதையும் படிக்க : வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் நிலச்சரிவு.. ஆழியார் சுங்கச்சாவடியில் சிக்கிய மக்கள்.. உணவு- குடிநீர் இன்றி கடும் அவதி!
மேலும் சிவராஜனின் இந்த வெற்றி, தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. சிவராஜன் சோலைமலை மேலும் பல வெற்றிகளைப் பெற்று, “தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்” எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டு
மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்காக நடத்தப்படும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 5ஆவது பதிப்பு தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது. ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று வருகின்றனர். பேட்மிண்டன் உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இச்சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. வீரர் சிவராஜன் சோலைமலை அவர்கள், மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
#CMJosephVijay
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 21, 2026
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கும் முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்ததுடன் அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். மேலும், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 லட்சமும் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்கு ரூ.30 லட்சமும் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க : சென்னையில் பள்ளிகளில் தேங்கிய மழைநீர்.. மழை தொடர்ந்தால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை? மாணவர்கள் எதிர்பார்ப்பு!!
ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா பகுதிகளில் 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபர் 18, 2026 அன்று தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள், வரும் அக்டோபர் 24, 2026 வரை நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.