AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புயலாக மாற வாய்ப்பு…. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மைய இயக்குநர் தகவல்

Northeast Monsoon Weather Update : சென்னை வானிலை மைய இயக்குநர் துரை அக்டோபர் 21, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகிற அக்டோபர் 23, 2026 அன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை 2026 ஜனவரி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

புயலாக மாற வாய்ப்பு…. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மைய இயக்குநர் தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Oct 2026 17:41 PM IST

சென்னை, அக்டோபர் 21 : வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் துரை அக்டோபர் 21, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வருகிற அக்டோபர் 23, 2026 அன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை 2026 ஜனவரி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை

மேலும் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. 2026 நவம்பர் மாதத்தில் அதிகளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகலாம். அடுத்த ஓரிரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கும், வரும் அக்டோபர் 25, 2026 அன்று கனமழைக்கும் வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மழை மானிகளை சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

இதையும் படிக்க : மகளிர் குழு கடனால் வந்த வினை? மாமனார்- மாமியார் திட்டியதால் விபரீதம்.. ராமநாதபுரத்தில் 2 வயது மகளை கொன்று தாய் தற்கொலை!

மின்வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை

இதற்கிடையில் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கனமழை, பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக மின் விநியோகக் கட்டமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகப் பணியாளர்களும் கீழ்க்கண்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள், மின்கம்பிகள் மற்றும் ஸ்டே கம்பிகளின் அருகில் செல்வதையும், அவற்றின் அருகே தேங்கியுள்ள மழைநீரில் இறங்குவதையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆபத்துகளைக் கண்டால் மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தரையிலோ, சாலையிலோ அல்லது மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ கூடாது. பாதுகாப்பான தூரத்தில் இருந்து மற்றவர்களையும், குறிப்பாகக் குழந்தைகளையும், அருகில் செல்லவிடாமல் எச்சரித்து, உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

திறந்தவெளி, தனித்த மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சமடைய வேண்டும். கட்டிடம் கிடைக்காவிட்டால் தாழ்வான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். திறந்த ஜன்னல்கள், கிரில்கள் அருகில் நிற்பதையும், இடியின்போது மின்சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்க : வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் நிலச்சரிவு.. ஆழியார் சுங்கச்சாவடியில் சிக்கிய மக்கள்.. உணவு- குடிநீர் இன்றி கடும் அவதி!

ஈரமான கைகளால் மின்சாதனங்களை இயக்காதீர்கள்

தண்ணீர் கசியும் ஈரமான சுவர்கள், ஈரமான சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களைத் தொடக்கூடாது. மின்கசிவு சந்தேகம் ஏற்பட்டால், பாதுகாப்பாக முடிந்தால் மின்சாரத்தைத் துண்டித்து, தகுதியான பணியாளர்களின் உதவியை நாட வேண்டும். குழந்தைகள் சுவிட்சுகள் மற்றும் மின் உபகரணங்கள் அருகில் விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

மின்தடை, அறுந்த மின்கம்பிகள், மின்கசிவு மற்றும் மின்சாரக் கட்டமைப்புப் பாதிப்புகள் தொடர்பான புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகம் அல்லது ‘மின்னகம்’ மின்நுகர்வோர் சேவை மையத்தின் 94987 94987 என்ற எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்-அப் வாயிலாகவே தொடர்புகொள்ளலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us