ஆயுத பூஜை தொடர் விடுமுறை: விமானக் கட்டணம் 5 மடங்கு உயர்வு – தனியார் பேருந்துகளிலும் 2 மடங்கு அதிகம்
Ayudha Puja and Vijayadashami Holidays : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தைவிடப் பல மடங்கு உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அக்டோபர் 16 : ஆயுத பூஜை (Ayudha Puja Holidays), விஜயதசமி பண்டிகைகளையொட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள், தனியார் பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தைவிடப் பல மடங்கு உயர்ந்துள்ளது. சில வழித்தடங்களில் விமானக் கட்டணம் 5 மடங்கு வரை அதிகரித்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நான்கு நாள் தொடர் விடுமுறை
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 19, 2026 திங்கள் கிழமை ஆயுத பூஜையும், அக்டோபர் 20,2026 செவ்வாய் கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன. இதனுடன் சனி, ஞாயிறு வார விடுமுறையையும் சேர்த்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், சென்னையில் வசிக்கும் பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க : ஆயுத பூஜை தொடர் விடுமுறை… சொந்த ஊர் செல்லும் பொதுமக்களே நோட் திஸ்.. 2,194 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!




இதன் காரணமாக, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலான ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகள் முன்பதிவு மூலம் நிரம்பியுள்ளது. இதனால் வேறு வழியின்றி விமானப் பயணத்தைத் தேர்வு செய்வதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கட்டண விவரம்
சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கான விமானக் கட்டணம், சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில்:
| நகரம் | சாதாரண நாட்களில் | தற்போது |
| கோவை | ரூ.5,373 | ரூ.16,601 |
| தூத்துக்குடி | ரூ.7,201 | ரூ.17,363 |
| திருச்சி | ரூ.5,066 | ரூ.9,896 |
| மதுரை | ரூ.5,459 | ரூ.8,537 |
| ஹைதராபாத் | ரூ.4,467 | ரூ.21,665 |
| பெங்களூரு | ரூ.4,474 | ரூ.18,041 |
| கொச்சி | ரூ.5,986 | ரூ.18,255 |
| திருவனந்தபுரம் | ரூ.6,745 | ரூ.20,448 |
| விஜயவாடா | ரூ.5,272 | ரூ.14,344 |
இவற்றில், சென்னை – ஹைதராபாத் வழித்தடத்தில்தான் கட்டண உயர்வு மிக அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக ரூ.4,467க்குக் கிடைக்கும் டிக்கெட், தற்போது ரூ.21,665 வரை உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 5 மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெங்களூருக்கான கட்டணம் நான்கு மடங்கும், மும்பை, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கான கட்டணம் மூன்று மடங்குக்கு மேலும் அதிகரித்துள்ளன. மதுரை, திருச்சி வழித்தடங்களில் உயர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அங்கும் கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் தொடர்ந்து விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்த, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், கட்டண உயர்வைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : ஆயுத பூஜை: தாம்பரம் – மானாமதுரை, எழும்பூர் – திருச்சி இடையே 8 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்
தனியார் பேருந்துகளிலும் கட்டணக் கொள்ளை
விமானங்களைப் போலவே, தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் ஏசி அல்லாத சாதாரண இருக்கை வசதி கொண்ட பேருந்துக்கே ரூ.2,250 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, ஆன்லைன் முன்பதிவுத் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.