அனுமதிக்கான தடை தகர்ந்தது.. தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
Tamil Nadu RSS Marches : ஆர்எஸ்எஸ் நிறுவன நாளையொட்டி, தமிழத்தில் இரு நாள்கள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது . காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் அந்த தடை தற்போது தகர்ந்துள்ளது .
ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் நிறுவன நாளையொட்டி, தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அக்டோபர் 18- ஆம் தேதி அல்லது 25- ஆம் தேதி அல்லது நவம்பர் 1- ஆம் தேதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலிடம் ஆர். எஸ். எஸ். அமைப்பு மனு அளித்திருந்தது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர். எஸ். எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் மனு தாக்கல் செய்தார்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காவல்துறை தரப்பில், அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், ஊர்வலத்துக்கு அனுமதி கேட்கும் வழித்தடம் அனுமதி அளிக்க முடியாத பகுதியாக உள்ளது.
மேலும் படிக்க: ஆராய்ச்சி ஒப்புதலுக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம்… சாரா தக்கர் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்.. நெல்லையில் பரபரப்பு!




ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்த நீதிமன்றம்
விழா நாட்களின் போது அனுமதி அளித்தால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது, காவல்துறை தரப்புக்கு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், விஜயதசமிக்கு முந்தைய நாளான அக்டோபர் 25, நவம்பர் 1- ஆம் தேதிகளில் ஆர். எஸ். எஸ். பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி
இதற்கு காவல்துறை தரப்பிலிருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை. ஏற்கனவே, பழைய காரணங்களை மீண்டும் கூறுவதால் ஆர். எஸ். எஸ். அமைப்பின் பேரணிக்கான நேரம், வழித்தடம், இடங்களை அக்டோபர் 19- ஆம் தேதிக்குள் இறுதிச் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அக்டோபர் 25, நவம்பர் 1- ஆம் தேதிகளில் 128 இடங்களில் ஆர். எஸ். எஸ். பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்?.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!