ஆராய்ச்சி ஒப்புதலுக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம்… சாரா தக்கர் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்.. நெல்லையில் பரபரப்பு!
Sarah Tucker College Professor Suspend : நெல்லை சாரா தக்கர் பெண்கள் கல்லூரியில் வணிகவியல் துறை ஆராய்ச்சி மாணவியின் ஆய்வுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பெருமாள்புரத்தில் சாரா தக்கர் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும், தன்னாட்சி கல்லூரியான இதில் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பட்டப் படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவி வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இவர் தனது வணிகவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கான ஒப்புதல் வழங்குவதற்காக ஆய்வு வழிகாட்டியான பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு, பேராசிரியை லீலாவதி ரூ. 1 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டதாக தெரிகிறது.
வணிகவியல் ஆய்வு ஒப்புதலுக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பேராசிரியரிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பேராசிரியை லீலாவதி வணிகவியல் துறை ஆய்வுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்குவேன். இல்லையெனில், ஒப்புதல் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, பேராசிரியை தன்னிடம் லஞ்சம் கேட்ட செல்போன் ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
மேலும் படிக்க: தென்காசி மாவட்ட மக்களே நோட் திஸ்.. நாளை மறுநாள் மின் தடை.. முழு விவரம் இதோ!




ஆய்வு ஒப்புதலுக்கு லஞ்சம் கேட்டது உறுதி
இந்த விவகாரம் சாரா தக்கர் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. அதன் அடிப்படையில், கல்லூரி நிர்வாக குழு அமைக்கப்பட்டு லஞ்ச புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சம்பந்தப்பட்ட வணிகவியல் துறை பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாயிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தான் ரூ. 1 ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட வணிகவியல் துறை ஆராய்ச்சி மாணவி ஆதித்யாவிடமும் கல்லூரி நிர்வாக குழு விசாரணை நடத்தியது.
ஆய்வு வழிகாட்டி – பேராசிரியை சஸ்பெண்ட்
இதில், ஆய்வுக்கு ஒப்புதல் வழங்க லீலாவதி லஞ்சம் கேட்டது ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், வணிகவியல் துறை வழிகாட்டி பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாயை பணியிடை நீக்கம் செய்து சாரா தக்கர் கல்லூரி முதல்வர் பெலிசியா கிளாடிஸ் உத்தரவிட்டார். அத்துடன், பேராசிரியை லீலாவதி முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருநெல்வேலியில் கஞ்சா வழக்கில் கைதான நபர்.. கால் முறிவால் மருத்துவமனையில் சிகிச்சை.. திடீரென எடுத்து விபரீத முடிவு!