நெல்லையில் கஞ்சா வழக்கில் கைதான நபர்.. கால் முறிவால் மருத்துவமனையில் சிகிச்சை.. திடீரென எடுத்து விபரீத முடிவு!
Tirunelveli Govt Hospital Prisoner Self Harm : திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் கால் எலும்பு முறிவால் சிகிச்சை பெற்று வந்த கஞ்சா கைதி திடீரென ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சங்கரலிங்கம் ( 27 வயது). இவரது மனைவி பவித்ரா. சங்கரலிங்கம் மீது 4 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சங்கரலிங்கம் கடந்த அக்டோபர் 10- ஆம் தேதி அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில், முன்னீர் பள்ளம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனிடையே, சங்கரலிங்கத்துக்கு காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் மருத்துவமனையில் உள்ள குளியலறையில் குளிக்க சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
குளியலறை ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய கைதி
ஆனால், வெகு நேரம் ஆகியும் குளிக்க சென்ற சங்கரலிங்கம் திரும்பி வரவில்லை. இதனால், அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதி குளியல் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, குளியல் அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கைதி சங்கரலிங்கம் தனது கைலியால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியில் கைதி சத்தம் போட்ட நிலையில், பாதுகாப்புக்காக இருந்த போலீசார், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓடி சென்று பார்த்தனர்.
மேலும் படிக்க: காலையில் திருமணம்.. மாலையில் பிரிவு.. மதுபோதை மாப்பிள்ளையால் களேபரமான கல்யாண வீடு.. உறவினர்கள் சோகம்!




சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தொடர்ந்து, அவரை தூக்கில் இருந்து மீட்டு மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக சங்கரலிங்கத்தின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கைதி சங்கரலிங்கம் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது சடலத்தை குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள மறுத்தனர்.
அரசு மருத்துவமனையில் பரபரப்பு
அத்துடன், தற்கொலையில் உள்ள காரணத்தைக் கேட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட கைதி எப்படி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு சிபிஐ-க்கு மாறுகிறதா? வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.. உயர்நீதிமன்றம் எடுத்த இறுதி முடிவு!