ஜெம் வீரமணி வழக்கு சிபிஐ-க்கு மாறுகிறதா? வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.. உயர்நீதிமன்றம் எடுத்த இறுதி முடிவு!
Gem Veeramani Case : சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம் .
தமிழகத்தில் 10- க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை ( அக்டோபர் 14- ஆம் தேதி) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெம் வீரமணி வழக்கில் தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளதால் இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, வழக்கறிஞர் ராஜசேகரன் தரப்பில் வழக்கு தாக்கல் செய்த பின்னர்தான், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்ததுடன், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக, வழக்கறிஞர் ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகள் நல ஆர்வலர் கொடுத்த பென் டிரைவ் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!




ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்கும் முயற்சி
இதனிடையே, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வீர மணியுடன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பதால் இந்த வழக்கு அரசியலாக்கப்படும் என்பதன் தீவிரத்தை கருதி இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும்.
ஜெம் வீரமணி விவகாரத்தில் 7 பேர் கைது- 7 வழக்குப்பதிவு
இந்த வழக்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே, ஜெம் வீரமணி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ரன், மற்றொரு உதவியாளர் கணேசன், கார் ஓட்டுநர்கள் உள்பட சுமார் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: நண்பர்கள் பெயரில் போலி ஆவணம்.. வங்கியில் போலி நகை.. வேலூரில் ரூ.1.7 கோடி அடித்த நகை மதிப்பீட்டாளர்கள்!