நண்பர்கள் பெயரில் போலி ஆவணம்.. வங்கியில் போலி நகை.. வேலூரில் ரூ.1.7 கோடி அடித்த நகை மதிப்பீட்டாளர்கள்!
Vellore Bank Of Baroda Fraud : வேலூர் மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 1.7 கோடி மோசடி செய்த இரு நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காவனூரில் பேங்க் ஆப் பரோடா என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளர், ஊழியர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் உட்பட சுமார் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வங்கியில் சின்ன வடுகன்தாங்கல் சேர்ந்த பார்த்திபன் மற்றும் கீழ் முட்டுக் கூரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், வங்கியில் வருடாந்திர கணக்கு சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில், லாக்கரில் உள்ள நகைகளில் போலி நகைகள் இருந்ததும், கடன் வழங்கிய பதிவேட்டில் ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கியின் மண்டல மேலாளர் யாசின் பாஷா வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நகை மதிப்பீட்டாளர்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரிந்து வரும் பார்த்திபன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், வங்கிக்கு நகை அடகு வைக்க வரும் பொதுமக்களின் நகைகளை மேற்கண்ட இருவரும் தான் பரிசோதனை செய்து அதற்கான கடன் தொகையை நிர்ணயம் செய்வர்.
மேலும் படிக்க: பாஜகவிடம் பல கோடி.. மின்சார கொள்முதலுக்கு பல ஆயிரம் கோடி.. முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் இதுக்குதானா.. சபாநாயகர் அதிரடி அட்டாக்!




போலி ஆவணம் மூலம் போலி நகை வைத்து ரூ. 1.7 கோடி மோசடி
அப்படி இருக்கும் நிலையில், இந்த மோசடி சம்பவத்தில் இருவருக்கும் முக்கிய தொடர்பு இருக்கும் என்று போலீசார் சந்தேகத்தினர். அதன் அடிப்படையில், பார்த்திபன் மற்றும் சீனிவாசன் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், இருவரும் போலி நகைகளை வைத்து மோசடி செய்ததை ஒத்துக் கொண்டனர். அதன்படி, பார்த்திபன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இணைந்து, தங்கள் வங்கியில் ஏற்கனவே நகை அடகு வைத்திருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.
இரு நகை மதிப்பீட்டாளர்கள் கைது
அதன் மூலம் 16 நகை கடன்களை கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன் சுமார் 1,080 கிராம் எடையுள்ள போலி நகைகளை அடகு வைத்துள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 28 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: சென்னை-தூத்துக்குடியில் பரபரப்பு.. ஒரே நாளில் 7.5 கிலோ போதை இலை பறிமுதல்.. போலீசார் விசாரணை!