பாஸ்வேர்டை மாற்றி நூதனம்.. மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஸ்வாகா.. சிக்கினார் திமுக நிர்வாகி கணவர்!
Madurai Corporation Scam : மதுரை மாநகராட்சியில் வரி நிர்ணயத்தில் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி ரூ. 200 கோடி முறைகேடு செய்த விவகாரத்தில் திமுக நிர்வாகியின் கணவரை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வணிக வளாகங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகள் என சுமார் 2 ஆயிரம் கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டிடங்களுக்கான வரி நிர்ணயம் செய்ததில் சுமார் ரூ. 200 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் 2024- ஆம் ஆண்டு வரை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி பணத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, திமுக மேயர் இந்திராணி, 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் வீடுகளில் போலீசார்
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல முன்னாள் தலைவர் புவனேஸ்வரி வீட்டுக்கு சென்ற அவரது கணவர் சரவணனை வரி விதிப்பு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதே வேளையில் முன்னாள் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் குமார், மேற்கு மண்டல தலைவரின் கணவர் விமல், முன்னாள் மத்திய மண்டல தலைவர் பாண்டி செல்வியின் கணவர் மிசா பாண்டியன் ஆகியோரின் வீடுகளுக்கும் போலீசார் சென்றனர்.
மேலும் படிக்க: 234 தொகுதிகளிலும் இறங்கும் வீ த லீடர்ஸ்.. அதிரடியாக அறிவித்த அண்ணாமலை.. மாஸ் பிளானின் பின்னணி என்ன!




திமுக நிர்வாகியின் கணவர் கைது
ஆனால், அவர்கள் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட புவனேஸ்வரியின் கணவர் சரவணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கெனவே 25 பேர் கைது
அதன் அடிப்படையில், மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் வினோதினி, ஆய்வாளர் அன்னலட்சுமி ஆகியோர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மதுரை சரக டி. ஐ. ஜி.யிடம் புகார் அளித்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முன்னாள் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி கணவர் கண்ணன் உள்ளிட்ட சுமார் 25 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னை-தூத்துக்குடியில் பரபரப்பு.. ஒரே நாளில் 7.5 கிலோ போதை இலை பறிமுதல்.. போலீசார் விசாரணை!