ஆவினில் பால், தயிர் மற்றும் கேண்டி ஐஸ்க்ரீம் அறிமுகம்
Aavin Launches New Ice Creams : ஆவின் நிறுவனம் 500 மி.லி. நிறைகொழுப்புப் பால், 50 கிராம் கப் தயிர், கேண்டி ஐஸ்க்ரீம் ஆகிய 3 புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஆவின் பால் பண்ணையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி இவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.
திருச்சி, அக்டோபர் 16 : ஆவின் (Aavin) நிறுவனம் 500 மி.லி. நிறைகொழுப்புப் பால், 50 கிராம் கப் தயிர், கேண்டி ஐஸ்க்ரீம் ஆகிய 3 புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி இவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
முன்னதாக, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிமாங்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சென்ற அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி, அங்கு நடைபெறும் பால் கொள்முதல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பால் உற்பத்தியாளர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் புதிய தயாரிப்புகளை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அதில், 500 மி.லி. அளவிலான நிறைகொழுப்புப் பால் பாக்கெட், சிறிய அளவில் தயிர் வாங்க விரும்புவோருக்கான 50 கிராம் கப் தயிர், கேண்டி வகை ஐஸ்க்ரீம் ஆகியவை இதில் அடங்கும்.




இதையும் படிக்க : கரூர் – கோவை 6 வழிச்சாலை.. தாமதத்துக்கான காரணம் என்ன.. பொதுமக்களின் கோரிக்கைகள் என்ன!
பால் தட்டுப்பாடு, கூடுதல் விலைப் புகார்
இதற்கிடையே, தமிழகத்தின் சில பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், ஆவின் பாலகங்கள் அல்லாத சில கடைகளில் ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் நுகர்வோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்பத்தூரில் வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் மற்றும் பால் பொருள்களை விநியோகத்துக்குக் கொண்டு செல்லும் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டீசல் விலை, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக உயர்ந்துவிட்ட நிலையிலும், கடந்த 2023 ஆம் ஆண்டில் போடப்பட்ட பழைய ஒப்பந்தக் கட்டணத்தின் அடிப்படையிலேயே வாகனங்களை இயக்குமாறு கூறப்படுவதாக ஆவின் வேன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather now: நாளை 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
இதனையடுத்து தற்போதைய விலை நிலவரங்களுக்கு ஏற்ப ஒப்பந்த கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தைக் கைவிடச் செய்யும் வகையில் ஆவின் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பல இடங்களில் தட்டுப்பாடு குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் நீடித்தால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் மேலும் பாதிக்கப்படுமோ என்ற கவலை வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.