‘வீடு லீசுக்கு போறீங்களா?’ சென்னையில் அரங்கேறிய பல லட்ச ரூபாய் நூதன மோசடி.. உஷார் மக்களே!!
இந்த மோசடி கும்பல் குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறை தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மே 24-ஆம் தேதி வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமரனிடம் முறையிட்டனர். அமைச்சர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
சென்னை, ஜுன் 13: சென்னையில் வீடு வாடகைக்கு எடுப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதிகப்படியான வாடகை காரணமாக, நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வீடுகளை குத்தகைக்கு (லீஸ்) எடுத்து தங்குவதையே பெரிதும் விரும்புகின்றனர். மக்களின் இந்தத் தேவையைச் சாதகமாக்கிக் கொண்டு, ஆன்லைன் தளங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக நூதன முறையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்த கும்பலைச் சேர்ந்த இருவரை வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர், வேளச்சேரி பகுதியில் குத்தகைக்கு வீடு தேடியுள்ளார். OLX போன்ற இணையதளம் மூலமாக வேளச்சேரி லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு வீட்டைப் பார்த்துள்ளார்.
மேலும் படிக்க: பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!
அந்த வீட்டின் உரிமையாளர் அக்பர் ஷரீப், அவரது சகோதரர் முஸாமில் ஷரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் வெண்ணிலாவிடம் பேசி, கடந்த ஆண்டு பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் அவர்கள் வீட்டை லீசுக்கு வழங்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இதேபோல் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஜய் என்பவரிடமும் இந்த கும்பல் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பாதிக்கப்பட்ட பலரும் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார்களை அடுக்கத் தொடங்கினர்.
மூன்று ஆண்டுகால நாடகம்:
போலீசாரின் தொடர் விசாரணையில், அக்பர் ஷரீப், முஸாமில் ஷரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் ஒரு போலி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திக்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களது மோசடி நெறிமுறைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. ஒரு வீட்டை கட்டுமானப் பணியில் இருக்கும் போதே காட்டி பலரிடம் முன்பணம் வாங்குவது இவர்களின் வழக்கம். மேலும், தங்களது கூட்டாளிகளையே அந்த வீட்டில் வாடகைக்கு அமர்த்தி வைப்பார்கள். வீடு பார்க்க வரும் நபர்களிடம் அந்த கூட்டாளிகள் நல்ல முறையில் பேசி, நம்பகத்தன்மையை உருவாக்கி குத்தகை பணத்தை முழுமையாக வாங்க வைப்பார்கள்.
சுழற்சி முறையில் ஏமாற்று வேலை:
வீட்டைப் பெறாமல் ஏமாந்தவர்கள் தங்களது பணத்தைத் திருப்பி கேட்கும்போது, தற்காலிகமாக அந்த வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்தி வீட்டை காலி செய்ய வைப்பார்கள். தொடர்ந்து பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுப்பவர்களுக்கு, தற்காலிகமாக வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொடுத்து, அதற்கான வாடகையை தாங்களே தருவதாகக் கூறுவார்கள். பாதிக்கப்பட்ட மற்றவர்களிடம் வாங்கிய பணத்தைக் கொண்டே, இவர்களுக்கு ஓராண்டு வரை வாடகை செலுத்திவிட்டு, அதன்பின்னர் மீதிப் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அமைச்சர் தலையீடும் போலீஸ் நடவடிக்கையும்:
இந்த மோசடி கும்பல் குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டும் காவல்துறை தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மே 24-ஆம் தேதி வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமரனிடம் முறையிட்டனர். அமைச்சர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
அமைச்சர் தலையிட்டு 15 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்த சூழலில், தற்போது வேளச்சேரி போலீசார் இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மோசடி கும்பலைச் சேர்ந்த முஸாமில் ஷரீஃப் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கும்பலின் பின்னணியில் உள்ள முதன்மை குற்றவாளியான அக்பர் ஷரீப் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க : ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!
இணையதளங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை குத்தகை பணம் பெற்று இந்த கும்பல் மிகப்பெரிய அளவில் மோசடி செய்திருப்பது சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.