ஒன்டே ஆக்சன்.. ஆர்டிஓ அலுவலகங்களில் அதிரடி சோதனை.. ரூ.37.81 லட்சம் பறிமுதல்.. ஊழல் தடுப்பு போலீசார் அதிரடி!
RTO offices Raids: தமிழகத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும கண்காணிப்பு பிரவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ரூ.31.85 லட்சம் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள செயல்பட்டு வரும் 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இன்று வியாழக்கிழமை ( ஜூன் 18) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது, போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவை உள்பக்கமாக பூட்டப்பட்டன. மேலும், பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடைபெற்றது.
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு அளிக்க லஞ்சம்
இந்த சோதனையில் பொதுமக்களிடம் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆகியவற்றுக்கு லஞ்சம் பெற்றுத்தர முயன்றது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, இதில் தொடர்புடைய ஜெயராஜ், பெரியசாமி, ஐசக் ஜெபசீலன், பட்டு ராஜா, சந்திரன் ஆகிய 5 இடைத்தரகர்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.55 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!




தரகர்களிடம் ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை
இந்த சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, பிடிபட்ட5 இடைத்தரகர்களையும் போலீசார் தூத்துக்குடியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், லஞ்ச பணம் பரிமாற்றத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தொடர்பு உள்ளதா என்றும், அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் ரூ.1.38 லட்சம் பறிமுதல்
இதே போல, பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. தென்காசி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுதர் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ. ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 800 ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.37.81 லட்சம் பறிமுதல்
தமிழக முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நாளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ. 37,81,168 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!