கூட்டணியில் சலசலப்பு.. பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி? பின்னணி என்ன?
Edappadi Palanisamy To Meet PM Modi : தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

சென்னை, ஜூலை 23 : தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை, (PM Modi Tamil Nadu Visit) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், தனது சுற்றுப் பயணத் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, கூட்டணி சலசலப்புகள் இருந்து வருகிறது. சமீபத்தில் தான், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இருப்பினும், கூட்டணியில் சில குழப்பங்கள் நீடித்து வருகிறது.
தமிழகம் வரும் பிரதமர் மோடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி என குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக தலைவர்களோ அதற்கு மறுத்து வருகின்றனர். இதனால், கூட்டணியில் சலசலப்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடி 2025 ஜூலை 26ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் 2025 ஜூலை 26ஆம் தேதி இரவு 7.50 மணியளவில் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். அதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன்பிறகு, தூத்துக்குடியில் இருந்து அன்றைய இரவு திருச்சிக்கு செல்கிறார். இரவு ஹோட்டலில் தங்கும் பிரதமர் மோடி, 2025 ஜூலை 27ஆம் தேதி திருச்சியில் இருந்து அரியலூர் செல்கிறார். அங்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை டெல்லி திரும்புகிறார்.




Also Read : தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத் திட்டம் இதுதான்.. முழு விவரம்!
பிரதமரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?
இந்த சூழலில் தான், தூத்துக்குடியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், கூட்டணி பலப்படுத்துவது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் குறித்து சில முக்கிய விஷயங்கள் குறித்து அவருடன் பேசுவார் என சொல்லப்படுகிறது.
கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி – பிரதமர் மோடி சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், தனது சுற்றுப் பயணத்தையும் எடப்பாடி பழனிசாமி மாற்றி உள்ளார்.
Also Read : ’கூட்டணி ஆட்சி தான்.. அமைச்சரவையிலும் பங்கு’ டிடிவி தினகரன் திட்டவட்டம்!
அதாவது, 2025 ஜூலை 26ஆம் தேதி சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி ஒத்திவைத்து, அதனை 2025 ஜூலை 29ஆம் தேதிக்கு மாற்றி உள்ளார். 2025 ஜூலை 26ஆம் தேதிக்கு பதில், ஜூலை 29ஆம் தேதி சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.