த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. த.வெ.க சொன்ன பதில்..
ADMK - TVK - NTK: எடப்பாடி பழனிசாமி ஒற்றை எண்ணத்தை இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம் என்றும் இந்த கருத்து தமிழக வெற்றிக்கழகத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை த.வெ.க உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அதிமுக. இதற்காக எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். முதல் பட்ட தேர்தல் பிரச்சார பயணம் என்பது 2025 ஜூலை 7ஆம் தேதி தொடங்கி நேற்று அதாவது 2025 ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பயணத்தின்போது அவர் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு தொகுதிகளில் மக்களை சந்தித்து சாலை வளம் மேற்கொண்டு உரையாற்றினார். இந்த பிரச்சார பயணத்தின் போது குறிப்பாக அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தனியார் செய்தி நாளிதழுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி ஒற்றை எண்ணத்தை இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம் என்றும் இந்த கருத்து தமிழக வெற்றிக்கழகத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணமும் – விமர்சனங்களும்:
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது. “ திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய இந்த இரண்டு கட்சிகளுக்கும் போதுமான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை, கொடிக்கம்பம் நடுவது கூட சிரமமாக உள்ளது. இவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா ? அதிமுகவிற்கு வரும் கட்சியை நாங்கள் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்” என பேசி இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்:
இந்த கருத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார் என்றும் இதில் வேறு எந்த உண்மையையும் இல்லை எனவும் குறிப்பிட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற எந்த அவசியமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சிகள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. ஆனால் தற்போது அது இல்லை. என்றைக்கு திமுக விடமிருந்து கை நீட்டி பணம் வாங்கி விட்டீர்களோ அன்றைக்கே கட்சி ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது” என கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் அதிமுக விரிப்பது இரத்தின கம்பளம் அல்ல ரத்த கரைய நிறைந்த சம்பளம் என குறிப்பிட்டு முதிர்ச்சியான அரசியல் தேவை எனவும் தெரிவித்து அதிமுகவின் அழைப்பை நிராகரித்தனர்.
த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு:
இந்த சூழலில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்திருந்தார். அதில், “ 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். இந்த எண்ணத்தை உடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். இந்த கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். ஆனால் இதுவரை தமிழக வெற்றிக்கழகத்துடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை” என தெரிவித்திருந்தார்.
தேர்தலில் தனித்து தான் போட்டி – நாம் தமிழர் கட்சி:
நாம் தமிழர் கட்சி பொருத்தவரை 2010 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அதிமுகவுக்கு சாதகமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அதிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு தனக்கென ஒரு வாக்கு வங்கியை சேர்த்து வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. இது போன்ற சூழலில் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: திமுகவின் ஊழல்கள் தான் பாஜகவை வளர்த்து வருகிறது – ஆதவ் அர்ஜுனா.
அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – த.வெ.க திட்டவட்டம்:
இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரியான திமுக மற்றும் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என அக்கட்சித் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி..
அது முதல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்து வந்தது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டது. இது போன்ற சூழலில் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்கு அழைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் பெரிய வெற்றியைப் பெறும். கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை நிராகரிக்கிறோம் என தமிழக வெற்றி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.