AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொசுக்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்.. எகிறும் டெங்கு பாதிப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..

2025–26ஆம் ஆண்டில் கம்ப்ரெசர் ஸ்ப்ரே, பவர் ஸ்ப்ரே இயந்திரங்கள், கைத்தெளிப்பான்கள், மினி புகையடிக்கும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.16.40 கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொசுக்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்.. எகிறும் டெங்கு பாதிப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Feb 2026 20:29 PM IST

பிப்ரவரி 16, 2026: திமுக ஆட்சியில் கொசுத் தொல்லைகள் அதிகரித்து, டெங்கு பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், பொதுமக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொசுக்கடியின் விளைவாக சென்னையில் மட்டும் அதிகப்படியான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதம் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் உடல்நலத்தில் அலட்சியம் காட்டும் திமுக அரசு:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாக மக்களின் சுகாதாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. குறிப்பாக, அவர்களின் உடல்நலனை கடுமையாக பாதிக்கும் கொசு, தெருநாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

மேலும் படிக்க: துரோகத்தின் பெயரால் காங்கிரஸை தோற்கடிப்பது திமுக தான் – அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு..

மழைக்காலம், குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் கொசுத் தொல்லையால் சென்னை மக்கள் மாலை முதல் இரவு வரை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் குப்பைக் கூடங்களை சரிவர பராமரிக்காததே கொசுக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

கொசுக்களை கட்டுப்படுத்த தவறும் அரசு:

கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்களை அந்தப் பணிக்குப் பயன்படுத்தாமல், சுய விளம்பரப் பணிகளுக்குப் பயன்படுத்துவதே கொசுக்கள் அதிகரிக்க முக்கிய காரணம். இதனால் சென்னை முழுவதும் கொசுக்கள் அதிகரித்துள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக கொசு மருந்து தெளிக்கும் பணிக்காக யாரும் வரவில்லை என்று சென்னை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொசுத் தொல்லையை ஒழிக்க ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதியுறுகின்றனர்.

கொசுக்கடியின் விளைவாக சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தேர்வு நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க: ‘எந்தக்கட்சியிலும் நான் இல்லை.. பொதுவெளியில் விவாதம் வேண்டாம்’ – வழக்கறிஞர் மூலம் நடிகை த்ரிஷா அறிக்கை

கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்:

2025–26ஆம் ஆண்டில் கம்ப்ரெசர் ஸ்ப்ரே, பவர் ஸ்ப்ரே இயந்திரங்கள், கைத்தெளிப்பான்கள், மினி புகையடிக்கும் இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ரூ.16.40 கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதில் ஊழல் நடந்ததாலேயே கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, அதற்கு பதிலாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே உடனடியாக கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, வீடு வீடாக ஆய்வு செய்து, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை அகற்றி, காய்ச்சல் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மக்களின் உடல்நலத்துடன் தொடர்புடைய இந்த பிரச்சினையில் அரசு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.