அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. கட்சியில் இருந்து விலகினார் நடிகை கௌதமி.. இபிஎஸ்-க்கு கடிதம்!!
Actress Gautami quits AIADMK: இந்தத் தொடர் விலகல்கள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியக் காரணங்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி மீண்டும் மீண்டெழும் என்கிற நம்பிக்கையைத் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் விதைக்கத் தலைமை தவறிவிட்டது. தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக உடைந்தனர்.
சென்னை, ஜுன் 14: அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த பிரபல நடிகை கௌதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அதிமுகவிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி கடந்த காலங்களில் அதிமுகவில் இணைந்த கௌதமிக்கு, உடனடியாகக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!
தொடர்கதையாகும் அதிமுக நிர்வாகிகளின் விலகல்:
With a heavy heart, I have resigned from the AIADMK today… pic.twitter.com/idq97IzgjQ
— Gautami Tadimalla (@gautamitads) June 14, 2026
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மேயர்கள் எனப் பல முக்கியப் புள்ளிகள் சனிக்கிழமை தோறும் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை அலுவலகத்திற்குச் சென்று, அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அண்மையில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது கௌதமியும் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.
தோல்வியும் நம்பிக்கை இன்மையுமே காரணம்:
இந்தத் தொடர் விலகல்கள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கும் முக்கியக் காரணங்கள், தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி மீண்டும் மீண்டெழும் என்கிற நம்பிக்கையைத் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் விதைக்கத் தலைமை தவறிவிட்டது. தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக உடைந்தனர். சுமார் 25 பேர் தவெக தரப்பை ஆதரித்த சூழலில், 21 பேர் மீண்டும் இபிஎஸ் பக்கமே திரும்பினாலும், 4 பேர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யும் அளவிற்குச் சூழல் சென்றது.
சாமானிய தொண்டர்களுக்கான வாய்ப்பு மறுப்பு:
காலம் காலமாக அடிமட்டத்திலிருந்து உழைத்த தொண்டர்களை விட, வெளியில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு (கௌதமி போன்றோருக்கு) உடனடியாக உயர்பதவிகள் வழங்கப்படுவது உள் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ஜெயலலிதா பாணியில் எளிய தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அடையாளத்தை அதிமுக தற்பொழுது இழந்துள்ளது.
இதையும் படிக்க: “தவெக அரசின் தவறுகளை ரீல்ஸ் மூலம் அம்பலப்படுத்துங்கள்”.. அதிமுகவினருக்கு இபிஎஸ் வகுத்த அதிரடி வியூகம்!
புதிய சக்தியாக உருவெடுத்த தவெக:
தமிழக அரசியலில் வாரிசு அரசியல் எதிர்ப்பு மற்றும் எளிய தொண்டர்களுக்கான வாய்ப்பு போன்ற அதிமுகவின் பாரம்பரிய அடையாளங்களைத் தவெக தட்டிப்பறித்துள்ளது. தவெக சார்பில் வெற்றி பெற்ற 108 பேரில் 101 பேர் முதல்முறை சட்டமன்றத்திற்குள் நுழைந்த சாமானியர்கள் ஆவர். அதிமுகவைச் சீரமைத்து, மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், மூத்த நிர்வாகிகள் முதல் கௌதமி வரை தொடர்ச்சியாக விலகி வருவது அதிமுகவிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.