கிறிஸ்துவ தேவாலய பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 8 நலத்திட்டங்கள் – எப்படி விண்ணப்பிப்பது?
கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாளர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம் எனவும் அவருக்கான 8 நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த பலன்களை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 23 : கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாளர்கள், வேதியர்கள், பாடகர்கள் கல்லறை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம் எனவும் அவருக்கான 8 நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அரசு பல்வேறு நல வாரியங்களை அமைத்துள்ளது.
கிறிஸ்துவ தேவாலய பணியாளர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் கிறிஸ்துவ தேவாலயங்களில் மாத ஊதியம் இல்லாமல் பணிபுரிந்து வரும் உபதேசியார்கள் மற்றும் இதர பணியாளர்களை கருத்தில் கொண்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாரியத்தின் மூலம், பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பயன் அளிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் முதியோர் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பின்வரும் 8 முக்கிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிக்க : ஆசிரியர் தேர்வு வாரிய மோசடி: 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை




இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், www.cwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கல் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 60 வயது நிறைவு பெறாதவரகவும் இருக்க வேண்டும்.
இந்த நல வாரியப் பதிவு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பொதுமக்கள் மற்றும் தேவாலயப் பணியாளர்கள் தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகஙக்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
கிறிஸ்துவ தேவாலய பணியாளர்களுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்
1. விபத்து ஈட்டுறுதித் திட்டம்: பணியின்போதோ அல்லது எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் கணிசமான உதவித்தொகை வழங்கப்படும்
2. இயற்கை மரண உதவித்தொகை: வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் இயற்கை எய்தினால், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
3. ஈமச்சடங்கு செலவுத்தொகை: உறுப்பினர்களின் மறைவின் போது, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான ஈமச்சடங்கு உதவித்தொகையும் உடனடியாக வழங்கப்படுகிறது.
4. கல்வி உதவித்தொகை: பணியாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியைக் கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு
5. திருமண உதவித்தொகை: உறுப்பினர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில், திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
6. மகப்பேறு உதவித்தொகை: பெண் பணியாளர்கள் அல்லது ஆண் உறுப்பினர்களின் மனைவியருக்கு மகப்பேறு கால பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
7. மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்: பணியாளர்களின் கண் பார்வையைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் வாங்கும் மூக்குக்கண்ணாடிகளுக்கான செலவுத்தொகையை ஈடு செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
8. முதியோர் ஓய்வூதியம்: குறிப்பிட்ட வயது நிறைவடைந்த பின்னர், முதுமைக் காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் உறுப்பினர்களுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.