நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு – முன்விரோதம் காரணமா ? பரபரப்பு தகவல்
தூத்துக்குடி அருகே பிரபல சினிமா நடிகை தீபாவின் தந்தை மீது 3 இளைஞர்கள் அரிவாளால் சராமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஜூன் 3 : பிரபல திரைப்பட நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் வசிப்பவர் புலவர் கணேசன். இவர் பிரபல சினிமா நடிகை தீபாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தூத்துக்குடி மாநகர் 57வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரத்தில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் தர்மகர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.
நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு
இந்த நிலையில் புலவர் கணேசனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் முத்தையாபுரத்தில் காமராஜர் சிலை அமைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்தததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் 2, 2026 அன்று முத்தையாபுரம் பஜார் பகுதியில் உள்ள டீக்கடை முன்பாக புலவர் கணேசன் நின்று கொண்டிருந்த திடீரென்று அங்கு பைக்கில் வந்த இளைஞர்கள் அரிவாளால் புலவர் கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையும் படிக்க : இளம் ஜோடிகளுக்கு குறி.. நிர்வாண வீடியோ மிரட்டல்.. திருவண்ணாமலையை அதிர வைக்கும் பகீர் சம்பவங்கள்!




இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், புலவர் கணேசனை தாக்கிய இளைஞர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களிடம் இருந்து அந்த இளைஞர்கள் பைக்கில் தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து தலை, கால் உட்பட பல்வேறு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட புலவர் கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், கார்த்தி இசக்கி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெட்டி ஒலி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த தீபா மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், டாக்டர், மண்டேலா உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படிக்க : காக்கி சட்டையில் ஒர் கருப்பு ஆடு.. புதுச்சேரியில் மனநலம் குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை.. இரவோடு இரவாக காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன் விரோதமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் பிரபல திரைப்பட நடிகையின் தந்தைக்கு இப்படி நடந்தது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.