ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவி! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!
CM Vijay Announces Cash Reward : ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பேபி சஹானா ரவி டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் (Para Asian Games) டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தமிழக வீராங்கனை சாதனை
ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா பகுதிகளில் 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த அக்டோபர் 18, 2026 அன்று தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள், வரும் அக்டோபர் 24, 2026 வரை நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா சார்பிலும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிக்க : வடையில் இறந்து கிடந்த பல்லி.. நேரில் சென்று கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!




இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை பேபி சஹானா ரவி, பெண்களுக்கான கிளாஸ் 9 பிரிவில் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச விளையாட்டு அரங்கில் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்
பேபி சஹானா ரவியின் சாதனையைப் பாராட்டி தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெறும் 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்த அவரைக் கௌரவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பேபி சஹானா ரவியின் வெற்றி குறித்து முதல்வர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவரது கடின உழைப்பும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்புமே இந்தச் சாதனைக்குக் காரணம் என்று அவர் பாராட்டியுள்ளார்.
மேலும், அவரது வெற்றி தமிழகத்தில் உள்ள இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் பேபி சஹானா ரவி மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க : மருத்துவ பரிசோதனையின் போது தப்பி ஓடிய கைதி.. கோயமபுத்தூர் பரபரப்பு!
ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் சுமார் 168 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 11 விளையாட்டுப் பிரிவுகளில் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.