AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aani Thirumanjanam: 2025 ஆனி திருமஞ்சனம் எப்போது? – அதன் சிறப்புகள்!

ஆனி திருமஞ்சனம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் மிக முக்கியமான விழாவாகும். சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் இந்த நாள், துன்பங்களை நீக்கி, செல்வம், கல்வி, பதவி உயர்வு போன்றவற்றைப் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Aani Thirumanjanam: 2025 ஆனி திருமஞ்சனம் எப்போது? – அதன் சிறப்புகள்!
ஆனி திருமஞ்சனம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Jun 2025 12:48 PM IST

ஆனி மாதம் தொடங்கி விட்டாலே பல்வேறு மதங்களின் திருநாள், திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும். இத்தகைய ஆனி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான பண்டிகை என்றால் அது ஆனி திருமஞ்சனம் தான். இந்து மதத்தில் அழிக்கும் கடவுளாகவும், முழு முதற் கடவுளாகவும் கருதப்படுபவர் சிவபெருமான். நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழிப்பதில் வல்லவரான அவருக்குரிய நாளாக தான் இந்த ஆனி திருமஞ்சனமானது நடைபெறுகிறது. ஏன் இந்த நாள் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதாவது திருமஞ்சனம் என்றால் மங்கள நீராடல் என்பது பொருளாகும். அதன்படி இந்நாளில் சிவன் கோயில்களில் முதன்மையானதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் அபிஷேகம் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது. சிவ ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

வருடத்திற்கு 6 முறை அபிஷேகம்

அதாவது ஆனி உத்திரம், மார்கழி மாதத்தில் திருவாதிரை, சித்திரை மாதத்தில் திருவோணம், ஆவணியில் சதுர்த்தசி, புரட்டாசியில் சதுர்த்தசி, மாசி மாதத்தில் சதுரத்தசி ஆகிய நாட்களில் மகா அபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த ஆறில் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் நடைபெறும் திருமஞ்சனம் வெகு விசேஷம் வாய்ந்தது. இந்த இரண்டு நாட்கள் மட்டும் நடராஜருக்கு அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்கள் மாலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று நடக்கும் இந்த நிகழ்வு ஆனி உத்திர தரிசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சஷ்டி திதியும் சேர்வது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. ஆனி மாத உத்திர நாளில் தான் நடராஜருக்கு தேவர்கள் பூஜைகள் செய்வதாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. சிதம்பரத்தில் இந்த ஆணி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் வெகுமரிசையாக கொண்டாடப்படும். இந்த நாளில் நடைபெறும் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்நாளில் நடராஜருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை நேரில் கண்டு வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும். செல்வ வளம், கல்வி வளர்ச்சி, பதவி உயர்வு உள்ளிட்டவையும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. சிவபெருமானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்கப்பெறுவதால் தீமைகளில் இருந்து நம்மை அவர் காப்பார் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு ஆனி திருமஞ்சனம்

2025 ஆம் ஆண்டு ஆனி திருமஞ்சனமானது ஜூலை 2 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்நாளில் சிதம்பரம் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக வழிபாட்டில் கலந்து கொண்டு பலன் பெறலாம். சிதம்பரத்தில் ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு முதல் மகா அபிஷேகம் நடைபெறும். அன்று மதியம் 2 மணிக்கு ஆனி உத்திர தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us