Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tiruchendur: திருச்செந்தூர் முருகனை வணங்கினால் இவ்வளவு பலன்களா?

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயில், அறுபடை வீடுகளில் இரண்டாவது கோயில். கடற்கரையில் அமைந்த இந்த கோயில், தனித்துவம் வாய்ந்தது. முருகனை வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோயிலில் வழிபாடு செய்யும் முறை, கருவறை சிறப்புகள், கிடைக்கும் பலன்கள் போன்றவை பற்றி நாம் காணலாம்.

Tiruchendur: திருச்செந்தூர் முருகனை வணங்கினால் இவ்வளவு பலன்களா?
திருச்செந்தூர் முருகன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 24 Jun 2025 11:12 AM

தமிழ்க்கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அனைத்து கோயில்களிலும் முருகன் பல்வேறு பெயர்களிலும், அவதாரங்களிலும் அருள்பாலித்து வருகிறார். தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் இருக்கும் நிலையில் அதில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர். கடல் சார்ந்த நிலப்பரப்பில் வீற்றிருக்கும் இந்த முருகன் செந்திலாண்டவர் என்ற பெயரோடு திகழ்கிறார். மற்ற படைவீடுகள் எல்லாம் குன்று, மலை மீது இருக்கும் நிலப்பரப்பில் இருக்கும் ஒரு படை வீடு என்ற சிறப்பு எப்போதும் திருச்செந்தூருக்கு உண்டு. நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து தங்கி தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி இறை வழிபாடு மேற்கொண்டு செல்கின்றனர். இத்தகைய திருச்செந்தூர் முருகனை வணங்கினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

திருப்புகழில் அருணகிரிநாதர் திருச்செந்தூர் கடல் முருகப் பெருமானுக்காக சிவபெருமான் உருவாக்கியது என குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட பல சிறப்புகள் வாய்ந்த இந்த திருச்செந்தூரில் கருவறையில் இரண்டு முருகன் சிலைகள் உள்ளது. நம்முடைய வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அது உடனடியாக நீங்கி மகிழ்ச்சி பிறக்க வேண்டும் என்றால் அனைவரின் முதலில் சொல்வது முருகனை வணங்குங்கள், அவன்தாள் பணியுங்கள், நல்லதே நடக்கும் என்பதுதான். இப்படிப்பட்ட திருச்செந்தூருக்கு சென்று வந்தால் மிகப்பெரிய திருப்பம் வரும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள்

முதலில் திருச்செந்தூர் செல்வதற்கு முன்னர் முருகனை வழிபடுவதற்கு ஏற்ப நம் உடலையும் மனதையும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் கோயிலுக்கு சென்று புனித நீராடி விட்டு அங்கிருக்கும் தூண்டுகை விநாயகர், மூவர் சமாதி ஆகியவை எல்லாம் சென்று விட்டு மூலவரை பார்க்க செல்லும் முன்பு சிறிது நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போதெல்லாம் மனமுழுக்க முருகன்தான் நிறைந்திருக்கும் அளவிற்கு கந்த சஷ்டி கவசம் முருகன் மந்திரம் திருப்புகழ்என எதையாவது ஒன்றை பாராயணம் செய்ய வேண்டும். எதுவுமே தெரியாவிட்டால் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா என வார்த்தையை மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருந்தாலே போதும்.

கருவறை பகுதியில் இருக்கும் மூலவரான சுப்பிரமணியரையும், சண்முகரையும் வழிபட்ட பிறகு மற்ற அனைத்து தெய்வங்களையும் கண்டிப்பாக வழிபட வேண்டும். கோவிலில் வணங்கிய பிறகு அங்கு அர்ச்சகர்களிடம் பன்னீர் இலையில் கொடுக்கும் விபதியை கேட்டு பெற வேண்டும். இந்த இலையில் கொடுக்கப்படும் விபூதியானது முருகப்பெருமானால் அருளப்பட்டது என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற கோயில்களை விட திருச்செந்தூர் கோயிலில் ஒரு விசேஷம் உள்ளது.

காரணம் நீங்கள் வழிபட செல்லும்போது முருகனை ஏற்றத்தில் இருந்து இறக்கத்தை நோக்கி சென்று காண வேண்டும். வழிபட்ட பிறகு இறக்கத்திலிருந்து ஏற்றத்திற்கு வந்த பிறகுதான் நீங்கள் வெளியே செல்ல முடியும். இதிலிருந்து நீங்கள் எப்பேர்பட்ட இறக்கத்தில் இருந்தாலும் என்னிடம் வந்த உன்னை நிச்சயம் ஏற்றத்திற்கு கூட்டி செல்வேன் என்பதை முருகன் சொல்லாமல் சொல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

திருச்செந்தூர் முருகனை வணங்கினால் முதலில் தனிப்பட்ட பிரச்னைகள் அகலும், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும், எதிரிகளை தொல்லை மறையும், செல்வ வளம் மற்றும் வருவாய் அதிகரிக்கும், திருமணத் தடை, குழந்தை பாக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என பக்தர்கள் ஐதீகமாக பார்க்கின்றனர்.

(ஆன்மிக நம்பிக்கையின் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு எந்தவித அறிவியல் விளக்கமும் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)