AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tiruchendur: திருச்செந்தூர் முருகனை வழிபடும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலஸ்தானத்திற்கு செல்லும் முன் கோயில் வளாகத்தில் இருக்கும் சில இடங்களுக்கு சென்று வழிபட்ட பின்னரே செல்ல வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வழிபாட்டிற்குப் பிறகு சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்த பின்னரே அங்கிருந்து புறப்பட வேண்டும்.

Tiruchendur: திருச்செந்தூர் முருகனை வழிபடும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jun 2025 11:53 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கடல் சார்ந்த நகரம் தான் திருச்செந்தூர் (Tiruchendur). அனைவருக்கும் இந்த பெயரைக் கேட்டாலே அங்கு கோயில் கொண்டிருக்கும் செந்திலாண்டவர் தான் நினைவுக்கு வருவார்கள். தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு (Lord Murugan) தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது. இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் மட்டும் தான் கடல் சார்ந்த நிலப்பரப்பில் உள்ளது. மற்ற ஐந்து படை வீடுகளும் குன்று அல்லது மலை மேல் அமைந்துள்ளது. இத்தகைய திருச்செந்தூருக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் கூட தினமும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து மகிழ்கின்றனர். அப்படியான திருச்செந்தூர் முருகனை வழிபடுவதற்கு முன் நாம் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதனைப் பற்றிப் பார்க்கலாம்.

முருகனை வணங்கும் முன் செய்ய வேண்டியவை

நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் ஒரு கோயிலுக்குள் நுழையும்போது நிச்சயம் அங்கு ஒரு விநாயகர் சிலை இருக்கும். எந்த கோயிலாக இருந்தாலும் முழு முதல் கடவுளாக அறியப்படும் பிள்ளையாரை வணங்கி விட்டு தான் உள்ளே இருக்கும் மூலவரை வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியான பட்சத்தில் திருச்செந்தூரில் எங்கு விநாயகர் கோயில் இருக்கிறது என பெரும்பாலோனோருக்கு தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று முருகனை வணங்கி விட்டு சிறிது நேரம் அங்கிருக்கும் மண்டபத்தில் அமர்ந்து பின்னர் வீடு திரும்புகிறார்கள். ஆனால் முருகன் கோயிலுக்கு செல்வதற்கு முன் நாம் சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என சொல்லப்படுகிறது.

நீங்கள் வீட்டிலிருந்து குளித்துவிட்டு வந்தாலும், அல்லது திருச்செந்தூர் கடல் மற்றும் நாழி கிணற்றில் நீராடி விட்டு முதலில் கோயில் மேற்குப் பக்க இறக்கத்தில் இருக்கும் தூண்டுகை விநாயகரை வழிபட வேண்டும். அங்கு அவருக்கு தேங்காய் விடலை செலுத்தி விட்டு பின்னர் நேராக கடலின் வலப்பக்கமாக இருக்கும் மூவர் சமாதிக்கு சென்று வணங்க வேண்டும். அங்கிருக்கும் காசி சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் மௌன சாமி ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயில் சிதிலமடைந்தபோது புரனமைத்தவர்கள் ஆவார்கள்.

இரண்டு முருகன்கள் 

இதன் பின்னர் தான் நீங்கள் முருகன் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும். எந்த கோயிலாக இருந்தாலும் வெறும் கையுடன் செல்வதை விட உங்களால் முடிந்த அளவு பூ அல்லது தீபம் அல்லது அர்ச்சனை பொருட்கள் வாங்கிவிட்டு செல்வது நல்லது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரண்டு மூலவர்கள் உண்டு. தனியாகவும், வள்ளி தெய்வானை சமேத சண்முகராகவும் முருகனை காணலாம். கூட்டமாக இருக்கும் நாட்களில் கருவறைக்கு பின்னால் இருக்கும் பஞ்சலிங்க தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வாய்ப்பு கிடைத்தால் அங்கேயும் வணங்கி விட்டு வாருங்கள். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம்.

இதன் பின்னர் பிரகாரத்தில் வலமிருந்து இடமாக செல்லும்போது தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். கண்டிப்பாக அனைத்து கோயில்களிலும் மூலவர் தவிர்த்து நாம் வணங்க வேண்டிய மிக முக்கியமான கடவுள் தட்சிணாமூர்த்தி ஆவார். இவரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும், ஆன்மீக நம்பிக்கை அதிகரிக்கும், வாழ்க்கையில் இன்னல்கள் நீங்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பிரகார முழுக்க வலம் வந்த பிறகு கோயிலின் வடக்கு பக்கத்தில் வள்ளி குகை இருக்கும். அங்கேயும் சென்று வழிபட வேண்டும். இதன்பிறகு கடற்கரையில் இருக்கும் அய்யா வைகுண்டசாமி கோயிலுக்கும் சென்று வழிபடலாம்.

கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியவுடன் உடனடியாக நாம் வீடு திரும்பக்கூடாது. சிறிது நேரம் பிரகாரத்தில் இளைப்பாறிய பின்னரே வீடு திரும்ப வேண்டும்.

(இறை நம்பிக்கை அடிப்படையில், இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us