AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? .. இதெல்லாம் நோட் பண்ணுங்க!

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் செந்திலாண்டவர் சுவாமி கோயிலின் தினசரி பூஜை நேரங்கள், விசேஷ நாட்களில் உள்ள மாற்றங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். திருச்செந்தூரில் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? .. இதெல்லாம் நோட் பண்ணுங்க!
திருச்செந்தூர் முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Jun 2025 12:59 PM IST

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.. தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்” என்ற பாடலைக் கேட்டாலே நாமெல்லாம் மெய் மறந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனின் அருள் மிகப்பெரிய சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். குன்றின் மேல் இருப்பான் குமரன் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் ஏதேனும் குன்று அல்லது மலை மீது முருகன் வீற்றிருக்கிறான். இப்படியான நிலையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தவிர்த்து மற்ற ஐந்து படை வீடுகளிலும் முருகன் குன்றின் மேல் தான் குடியிருந்து அருள்பாலித்து வருகிறார். ஆனால் திருச்செந்தூரில் கடலோரத்தில் காட்சி கொடுக்கும் அந்த செந்திலாண்டவனை காண கண் கோடி வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் சொல்லும் அளவுக்கு மிகவும் பிரபலம் வாய்ந்தவனாக முருகன் திகழ்கிறார்.

உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு தன்னை நாடுபவர்களுக்கு வேண்டுபவற்றை தருபவனாக அவன் திகழ்கிறான். இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்குள்ள கடலில் குளித்து, நாழி கிணற்றில் புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். இப்படியான நிலையில் திருச்செந்தூரில் அதிகாலை திறக்கப்படும் நடை இரவு வரை அடைக்கப்படுவதே இல்லை.

2025 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெகு விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை நடை திறப்பு முதல் இரவு நடை அடைக்கப்படுவது வரை என்னென்ன பூஜைகள் எத்தனை மணிக்கு நடைபெறும் என்பதை பற்றி நாம் காணலாம்.

கோயிலின் நிகழ்வுகள்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் இணையதள பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக நடை திறக்கப்பட்டு இருக்கும். திருவிழா நேரங்களில் இந்த நடைதிறப்பு நேரமானது மாறுதலுக்கு உட்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் முருகன் காட்சி தருவார். தொடர்ந்து அதிகாலை 5.10 மணி முதல் 5.25 மணிக்குள் சுப்ரபாத பூஜை நடைபெறும். பின்னர் 5.32 மணி முதல் 5. 35 மணிக்குள் 3 நிமிடம் விஸ்வரூப தரிசனம் காட்டப்படும். இதனையடுத்து தங்க கவசத்துடன் கால சந்தி பூஜை காலை 8 மணிக்கு தொடங்கி 8:30க்குள் நடைபெறும். இதற்கு அடுத்தபடியாக உச்சிக்கால பூஜை மதியம் 12 மணிக்கு தொடங்கி 12.15 மணிக்குள் நடைபெறும். அடுத்ததாக மாலையில் சாயரட்சை பூஜை 5 மணிக்கு தொடங்கி 5.15 க்குள் நடைபெறும். இறுதியாக பள்ளியறை பூஜை இரவு 8:45 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் நிறைவடைந்து நடை சாற்றப்படும்.

அது மட்டுமல்லாமல் வைகாசி மாதம் அதிகாலை ஒரு மணிக்கும், மார்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கும், மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா காலத்தில் முதல் மற்றும் ஏழாம் நாள் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும். மற்ற நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு நிகழும். கந்த சஷ்டி திருவிழா காலத்தில் 1ம் நாள் மற்றும்  ஆறாம் நாள் திருவிழாவில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும். தைப்பூசம் அன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படும். பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கமாகும். எனவே திருச்செந்தூர் போகும் பக்தர்கள் சரியான நேரத்தில் சரியான பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெறுங்கள்.

Follow Us