AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Lord Murugan: குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? – நீங்களே பாருங்க!

Kundrathurur Murugan Temple: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலாகும். கோயிலின் வரலாறு, தினசரி தரிசன நேரம், சிறப்புகள் மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்கள் பற்றி நாம் காணலாம். முருகனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் மலை அடிவாரத்தில் உள்ளது.

Lord Murugan: குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? – நீங்களே பாருங்க!
குன்றத்தூர் முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Jun 2025 12:43 PM IST

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு குன்று அல்லது மலை மீது தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பதே உண்மையாகும். ஒவ்வொரு மாவட்டத்தையும் எடுத்துக் கொண்டால் முருகன், கந்தன், கடம்பன், தண்டாயுதபாணி, செந்திலாண்டவர் என பல பல பெயர்களில் முருகன் ஒரு முகம், நான்முகம், ஆறுமுகமாகவும் காட்சிக் கொடுக்கிறார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான முருகன் கோயில்களில் உண்டான குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

குன்றத்தூர் முருகன் கோயில் தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் மாலையில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேரடி பேருந்து சேவை உள்ளது.

கோயில் உருவான வரலாறு

திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப்பெருமான் தனது சினத்தை தணிப்பதற்காக தணிகை மலை என அழைக்கப்படும் திருத்தணிக்கு சென்றார். செல்லும் வழியில் சிவபூஜை செய்ய எண்ணி தற்போது குன்றத்தூர் முருகன் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். பின்னர் இங்குள்ள குன்று ஒன்றில் சிறிது நேரம் சிவனை நினைத்து தியானம் செய்துவிட்டு புறப்பட்டார். பிற்காலத்தில் இந்த பகுதி குலோத்துங்க சோழ மன்னன் ஆட்சி செய்த போது அவர் தவம் செய்த குன்றின் மீது முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது.

முருகனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் மலை அடிவாரத்தில் தனி கோயிலில் கந்தழீஸ்வரர் என அருள்பாலித்து வருகிறார். இந்த கோயில் பிற்காலத்தில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 900 ஆண்டுகளாக கோயில் பயன்பாட்டில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தில் மிகவும் முக்கியமான முருகன் கோயிலில் ஒன்றாக இந்த தலம் திகழ்கிறது.

கோயிலின் சிறப்புகள்

சுமார் 84 படிக்கட்டுகள் கொண்ட இந்த குன்றத்தூர் முருகன் கோயிலில் சன்னதிக்கு நேர் எதிராக நின்று பார்த்தால் முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி தெய்வானையை பார்க்க முடியாத சூழல் இருக்கும். சன்னதிக்கு இடது பக்கம் அல்லது வலது பக்கம் நின்று பார்த்தால் முருகன் வள்ளி அல்லது தெய்வானை என இருவரில் ஒருவருடன் மட்டுமே இருப்பதை காணலாம். ஆனால் மூன்று பேரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியாது. மேலும் முருகன் சன்னதி முன்பு துவார பாலர்கள் இருவரும் கையில் முருகப்பெருமானை போல வஜ்ரம், சூலம் ஆகவே வைத்திருக்கின்றனர்.

இங்கு சுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம் செய்த விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் தட்சணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, காசி விஸ்வநாதர்,விசாலாட்சி, விநாயகர், பைரவர், நாகர் சன்னதி, நவக்கிரகம் ஆகியவை உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உருவாக்கப்பட்டது.

இங்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் இருக்கும் அரச மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி பிரார்த்தனை மேற்கொண்டனர். குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றையும் அளிக்கின்றனர். இந்த குன்றத்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் போது சூரசம்ஹாரம், வள்ளி திருமணம், தெய்வானை திருமணம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவையும் இந்த கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.

(இந்தக்கட்டுரை இறை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வரலாறுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை)

Follow Us