AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tirunelveli: திருநெல்வேலியின் “தென் திருப்பதி” .. இந்த கோயில் பற்றி தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில், தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. வைப் ராஜ்ஜியக் காட்டில் பைலர் சீனிவாச பெருமாள் காட்சி அளித்ததால் உருவானதாக கோயிலின் வரலாறு உள்ளது. திருப்பதி கோயிலுடனான ஒற்றுமைகள் உள்ளதால் பக்தர்கள் தென் திருப்பதி என இதனை அழைக்கின்றனர்.

Tirunelveli: திருநெல்வேலியின் “தென் திருப்பதி” .. இந்த கோயில் பற்றி தெரியுமா?
திருவேங்கடநாதபுரம் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Jun 2025 19:14 PM IST

திருப்பதி என்றதும் நம் அனைவரின் மனதிற்கும் ஏழுமலையான் தான் நினைவுக்கு வருவார். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் திருப்பதிக்கு வந்து செல்கிறனர். அதேசமயம் எல்லாராலும் திருப்பதி செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இணையாக கருதப்படும் கோயில்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு, நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி கோயில் பற்றியும், இந்த கோயில் உருவான வரலாறு, அதன் சிறப்புகள் பற்றியும் காணலாம்.

திருப்பதியை போல கோயில்

இந்த கோயிலில் மூலவர் திருவேங்கடமுடையான் என்ற பெயரிலும் உற்சவர் ஸ்ரீ நிவாசன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார்கள். தாயாராக அலமேலு அம்மாள் காட்சி கொடுக்கும் நிலையில் இக்கோயிலின் தலவிருட்சமாக நெல்லி மரமும், தீர்த்தமாக ஸ்ரீனிவாச தீர்த்தமும் உள்ளது. இந்த வெங்கடாஜலபதி கோயில் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இங்கு கீழ் திருப்பதி, மேல் திருப்பதி என இரண்டு கோயில்கள் உள்ளது சிறப்பானதாகும்.

கோயில் உருவான வரலாறு

தற்போது கோயில் அமைந்திருக்கும் இந்த பகுதியானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வைப் ராஜ்ஜியம் என்ற பெயரில் காடு சூழ்ந்து இருந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையில் வியாசமாமுனிவரின் முதன்மை சீடராக திகழும் பைலர் சீனிவாச பெருமாளை நினைத்து தவம் இருந்தார். அப்போது அங்கு பெருமாள் சிலையோ, திருஉருவமோ இல்லாத நிலையில் தனது மனதில் அவரை நினைத்துக் கொண்டு மலர்களை தூவி வணங்கினார். சரியாக ஏழாம் நாளில் அந்த மலர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து மிகப்பெரும் ஜோதியாக வானில் தாமிரபரணி நதிக்கரையின் நடுவில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி ஃபைலருக்கு காட்சி கொடுத்தார்.

இதனைக் கண்டு பரவசம் அடைந்த அவர் வடக்கே திருப்பதி வெங்கடாசலபதியாக குடிகொண்டு அருள் பாலிப்பது போல் இந்த இடத்திலும் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அதன்படி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் அலர்மேலு மங்கை சமதராக சீனிவாச பெருமாள் இந்த கோயிலில் காட்சி தருகிறார்.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் சங்கு சக்கரத்துடன் கூடிய கருடாழ்வார் சன்னதி உள்ளது. பூமி தேவியை காப்பதற்காக பெருமாள் போரிட  சென்றார். அப்போது உலகையும் மக்களையும் காக்க தான் வைத்திருந்த ஆயுதங்களான சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்தார். தான் வரும் வரை உலகை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்க அந்த ஆயுதங்களுடன் கருடாழ்வார் பணி செய்தார். மேலும் திருப்பதியை போன்று இந்த கோயில் இருப்பதால் தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் எப்படி ஆந்திர பிரதேசத்தில் ஏழு மலைகள், காளகஸ்தி, கீழ் திருப்பதி ஆகியவை உடன் திருப்பதி ஏழுமலையான் காட்சி தருகிறாரோ அதேபோல் இந்த கோயிலில் அமைந்துள்ள பகுதியில் ஏழு மலைகளுக்கு ஒப்பான தென்காளகஸ்தி எனப்படும் சங்கானி கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாக ஓடும் நிலையில் இங்கு தாமிரபரணி நீர்வீழ்ச்சியாக விழுந்து ஆறாக ஓடுகிறது. புஷ்கரணி சமயத்தில் இந்த இடம் சீனிவாச கட்டம் என்று அழைக்கப்பட்டது.

திருவேங்கடநாதபுரம் பெயர் காரணம்

தனக்கு குழந்தை பாக்கியம் அளித்ததால் இந்த பகுதியை ஆட்சி செய்த வெங்கடப்ப நாயக்க மன்னர் சுற்றி இருந்த காட்டை அழித்து அனைத்தையும் குடி நிலமாக மாற்றி கோயில் கட்டி தனது பெயரையே இந்த ஊருக்கு திருவேங்கடநாதபுரம் என சூட்டினார். தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் காட்சி கொடுக்கும் வெங்கடேச பெருமாளுக்கு திருப்பணிகளாக இருக்க 12 ஆழ்வார்களும் விரும்பினார்களாம். அப்படியாக கருவறைக்கு செல்லும் திருப்படிகளாக ஆழ்வார்கள் அமைந்துள்ளதாக ஐதீகம் உள்ளது.

இக்கோயிலில் சுவாமிக்கு முன்பக்கமாக இடது புறம் தனது காலை மடித்து இரண்டு கைகளையும் மேலே நோக்கியபடி வாகன கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி கொடுக்கிறார்.திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து முடி காணிக்கை தொடங்கி அனைத்து விதமான நேர்த்திக்கடன்களையும் செலுத்துகின்றனர். மேலும் திருமணத்தடை, உடல் நல பிரச்சனை, நாகதோஷம் நீங்கவும் ,குழந்தை வரம் கிட்டவும், வியாபாரம் செழிக்கவும், பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

கோயிலுக்கு செல்வது எப்படி?

இந்த கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் நிலையில் அவருக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். சித்திரை பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமை, பாரிவேட்டை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி மாத கருட உற்சவம் ஆகியவை இந்த கோயிலில் சிறப்பாக நடைபெறும் இந்த கோயிலுக்கு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றது அதே சமயம் திருநெல்வேலி டவுனுக்கு சென்று அங்கிருந்து மினி பேருந்து, ஆட்டோ மூலமாக கோயிலை அடையலாம்.

கோயிலுக்கு செல்ல மேப்: மேல திருவேங்கடநாதபுரம்

(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us