Vaikasi Visakam 2025: கேட்டதெல்லாம் அருளும் முருகன்.. வைகாசி விசாகம் விரதத்தின் பலன்கள்!
வைகாசி விசாகம், முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். 2025-ம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது பல நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம், திருமண வரன் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என சொல்லப்படுகிறது.

தமிழ் கடவுள் முருகனுக்கு ஒவ்வொரு மாதத்திலும் கிருத்திகை, சஷ்டி ஆகியவை மிக முக்கிய வழிபாட்டு தினங்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதேசமயம் முருகனுக்குரிய உகந்த நட்சத்திரமாக கார்த்திகை, உத்திரம், விசாகம் ஆகியவை உள்ளது. இந்த மூன்றில் விசாகம் நட்சத்திரத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த விசாகம் நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் மிக விசேஷமானது. வைகாசி விசாகம் என அழைக்கப்படும் இந்நாளில் நாம் விரதம் இருந்து வழிபட்டால் முருகப்பெருமான் நாம் கேட்கும் அனைத்தையும் தந்தருள்வார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் வைகாசி விசாக விரத்தின் பலன்கள் பற்றி காணலாம்.
வைகாசி விசாகம் எப்போது?
இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான வைகாசி விசாகம் ஜூன் மாதம் 9ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஜூன் 8ம் தேதி பகல் 2.10 மணிக்கு தொடங்கும் விசாக நட்சத்திரம் ஜூன் 9ஆம் தேதி மாலை 4.40 மணி வரை இருக்கிறது ஆனால் ஜூன் 10ஆம் தேதி பகல் 12.27 மணிக்கு தான் பௌர்ணமி திதி தொடங்குகிறது. இதன் காரணமாக ஜூன் 9ம் தேதி நாள் முழுவதும் விசாக நட்சத்திரம் இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
இந்த நாளில் நாம் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கும் போது நம்மை சூழ்ந்துள்ள பகை விலகும், துன்பம் நீங்கும் என நம்பிக்கை உண்டாகும். மேலும் இந்த விசேஷ தினத்தில் நாம் பணம் தொடங்கி நீராகாரம், உடை, பொருட்கள், உணவு வரை எதை தானமாக செய்தாலும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைந்து திருமண வரன் அமையும். அதேபோல் குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுபவர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரும் என்பது ஐதீகமாக உள்ளது.
பொதுவாக முருகனிடம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி திதியில் தான் விரதம் இருப்பது வழக்கம். முருகப்பெருமான் அவதரித்த தினமாக கருதப்படும் இந்த வைகாசி விசாகத்தில் விரதம் மேற்கொள்வது சிறந்தது என சொல்லப்படுகிறது. அவ்வாறு விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு அடுத்த ஓராண்டிற்குள் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் விரதம் மேற்கொள்பவர்கள் தங்களுடைய உடல் நலத்தின் மீது கவனம் கொண்டு மருத்துவர்களின் உரிய ஆலோசனைப்படி வழிபடலாம். விரத காலம் முழுவதும் உண்ணாமல் அல்லது பால்,பழம் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அதே சமயம் பூஜை வழிபாடு கோயில்களுக்கு சென்று வழிபடுவது என்பது மிக முக்கியமானதாகும். விரத நேரத்தில் முருகனின் திருமந்திரம், பாடல்கள் உள்ளிட்டவற்றை பாராயணம் செய்யலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)