Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025 வைகாசி விசாகம் எப்போது? .. முருகனுக்குரிய நாள் உருவான கதை!

2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி வருகிறது. இது முருகப்பெருமானின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்ததன் பொருட்டு முருகனை சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்த தீப்பொறிகள் மூலம் உருவாக்கினார். இந்நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். விரதம் இருந்து முருகனை வழிபடுவது பலனளிக்கும் என நம்பப்படுகிறது.

2025 வைகாசி விசாகம் எப்போது? .. முருகனுக்குரிய நாள் உருவான கதை!
வைகாசி விசாகம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 May 2025 11:37 AM

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கடவுளுக்கும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திதிகள் அடிப்படையில் விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் அந்தந்த தெய்வங்கள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தார்கள் என குறிப்பிடப்பட்டு அன்றைய நாளும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு (Lord Murugan) உகந்த நட்சத்திரங்களாக விசாகம், கார்த்திகை மற்றும் உத்திரம் ஆகும் என ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். அதேபோல் பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த நாளாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானை வழிபடுவதற்கு சிறந்த நாளாகும். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் (Vaikasi Vaisakam) எப்போது என்றும் அதன் பின்னணி குறித்தும் நான் இந்த தொகுப்பில் காணலாம்.

2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம்

நடப்பாண்டு வைகாசி விசாகமானது வரும் ஜூன் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்நாளில் உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் விரதமிருந்து இந்நாளில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

வைகாசி விசாகத்தின் பின்னணி 

வைகாசி விசாகம் என்பது துணிச்சலான போர்குணம் கொண்ட தெய்வமாக பார்க்கப்படும் முருகப் பெருமானின் பிறப்பைக் குறிக்கும் ஒரு மங்களகரமான நாளாகும். மிகவும் சக்தி வாய்ந்த சூரபத்மன் என்ற அரக்கன் உலகின் சமநிலைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தான். இதனால் பெரும் துன்பத்திற்கு ஆளான தேவர்கள் அரக்கனை எதிர்கொள்ள வேண்டி சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இதனையடுத்து சிவன் தனது சர்வ வல்லமை கொண்ட நெற்றிக்கண்ணில் இருந்து சூரபத்மனை தோற்கடித்து சமநிலையை நிலைநாட்டும் வீரனை உருவாக்கும் பொருட்டு தீப்பொறியை வெளியிட்டார்.

அந்த தீப்பொறியானது ஆறு பகுதிகளாகப் பிரிந்து கங்கை நதியில் விழுந்தது பயணித்தது. கடைசியாக இவை அனைத்தும் தென்னிந்தியாவில் உள்ள சரவணப் பொய்கை என்னும் இடத்தை அடைந்தது. பார்வதி தேவி இந்தத் தீப்பொறிகளைச் சேகரித்து, அவற்றை சரவணபவ என்ற சிறுவனாக உருவாக்கினார். அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகை பெண்களாக அழைக்கப்படும் ஆறு ரிஷி பத்தினிகளுக்கும் வழங்கினார். விசாக நட்சத்திரத்தில் அவர் அவதரித்ததால் இந்நாள் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

வி என்றால் பறவை என்று அர்த்தமாகும். சாகன் என்றால் பறவை மீது சஞ்சரிப்பவன் என்று பொருள்படும்.  இந்நாளில் நாம் கண்களை மூடிக்கொண்டு முருகப்பெருமானை நினைத்தாலே போது வாழ்க்கையின் துன்பம், துயரம் நீங்கி இன்பம் பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)