Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

10 கைகளில் பத்து ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா?

அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வாசுதேவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சி அளிக்கிறார். கோயிலின் சிறப்பம்சம், பத்து கரங்களுடன் காட்சி தரும் திருநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சன்னதியாகும். இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

10 கைகளில் பத்து ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா?
ராஜகோபால சுவாமி கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 26 May 2025 17:00 PM

தமிழகத்தில் சைவம், வைணவம் சார்ந்த கோயில்கள் திரும்பும் திசையெங்கும் உள்ளது. சில இடங்களிலும் இரு சமயமும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தும் வழிபாட்டு தலங்களும் உள்ளது. அந்த வகையில் வைணவ சமயத்தில் வழிபடக்கூடிய மிக முக்கிய கடவுளான பெருமாள் பல்வேறு பெயர்களில் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார். இப்படியான நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலம் ஊரில் இருக்கும் அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் பற்றி நாம் எந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயிலில் வழிபாட்டு கடவுள்கள் 

இக்கோயிலில் மூலவரான வாசுதேவப்பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் அதே சமயம் உற்சவரான ராஜகோபாலசுவாமி பாமா, ருக்மணியுடன் வீற்றிருக்கின்றார். மேலும் செங்கமலவல்லி தாயார் தனி சன்னதியில் காட்சி கொடுக்கிறார். அதே போல் இக்கோயிலுக்கு உள்ளே திருநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சன்னதியும், கோயிலுக்கு வெளியே சதுர்புஜ ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. இந்த கோயில் உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி காணலாம்.

கோயில் உருவான வரலாறு

இலங்கையில் ராவணனுடன் யுத்தம் முடிந்து ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது நாரதர் அங்கு வந்து ராமனிடம், “இலங்கையில் யுத்தம் என்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு வேலை இருக்கிறது. அரக்கர்களின் வாரிசுகள் உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இதனால் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் உன்னை அழிப்பதற்காக சபதம் செய்துள்ளனர்.

இதில் இரக்கபிந்து, இரக்கரட்சகன் ஆகிய இரு அசுரர்கள் கடலுக்கு அடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியாகும் பட்சத்தில் இறந்து போன அனைத்து அசுரர்களும் மீண்டும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்” என கூறினார்.

இதனைக் கேட்ட ராமன், “நீங்கள் கூறியபடி அனைத்து அரக்கர்களும் அளிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் நான் குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்திக்கு திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாகவாது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என சொன்னார். அதற்கு நாரதர் லட்சுமணனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். லட்சுமணன் என்னுடைய நிழல் போன்றவன். அவனை நான் அனுப்ப முடியாது என்றான் ராமன்.

மேலும் இதற்கெல்லாம் சரியான நபராக அழியாவரம் பெற்றவரும், அளவில்லா ஆற்றல் கொண்டவருமான அனுமன் அனுப்புகிறேன் என ராமர் கூறினார். அதன்படி அசுரர்களை அழிக்க சென்ற  அனுமனுக்கு திருமால் சங்கு சக்கரத்தை கொடுத்தார். ருத்ரன் மழுவை கொடுத்தான். ராமன் வில்லையும் அம்பையும் வழங்கினான். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தான். கிருஷ்ணன் வெண்ணை கொடுத்தான். கருடன் தன் பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தான்.

இப்படி தெய்வங்கள் வழங்கிய அந்த ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் நிற்க கடைசியாக அங்க வந்த சிவன் தனது நெற்றிக்கண்ணை அனுமனுக்கு கொடுக்க அவன் அங்கிருந்து புறப்பட்டு கடலுக்குடியில் தவம் இருந்து அசுரர்களை அழித்துவிட்டு அயோத்தி திரும்பினான். திரும்பும் வழியில் கொண்டு சென்று ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக தளத்தில் தங்கியதால் ஆனந்தமங்கலம் என இந்த ஊர் பெயர் பெற்றது. இது நாளடைவில் அனந்தமங்கலம் என அழைக்கப்பட்டது.

கோயிலின் சிறப்புகள்

இது பெருமாள் கோயிலாக இருக்கும் பட்சத்தில் இங்கு அனுமன் தான் மிகவும் விசேஷ வழிபாட்டுடன் கொண்டாடப்படுகிறார். இங்கிருக்கும் ஆஞ்சநேயரின் வாலில் நவகிரகங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கிரகத்திற்கு உண்டான நிகழ்வுகளின்போது அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடானது நடத்தப்படுகிறது. கோயிலின் உள்ளே அருள் பாலிக்கும் திருநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 10 கைகளில் 10 விதமான ஆயுதங்களுடன் காட்சி கொடுக்கிறார்.

இந்த கோயிலில் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பெருமாளுக்குரிய விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜையானது நடைபெறுகிறது. இப்படிப்பட்ட ஆஞ்சநேயரை காண்பது மிகவும் அரிதானது என்பதால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி இந்த கோயிலுக்கு வருகை தந்து வழிபடுகின்றனர். வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்!

(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)