AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vastu Tips: வீட்டில் கவனம்.. கழிவறை அமைக்க சரியான திசை எது தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கழிவறையின் சரியான அமைவிடம், நிறம் மற்றும் திசை மிக முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மேற்கு திசை சிறந்தது என்றாலும், வடமேற்கு (மேற்கு பக்கம்) மற்றும் தென்கிழக்கு (கிழக்கு பக்கம்) திசைகளும் ஏற்புடையவை. எக்காரணம் கொண்டு வடகிழக்கு திசையில் கழிவறை அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

Vastu Tips: வீட்டில் கவனம்.. கழிவறை அமைக்க சரியான திசை எது தெரியுமா?
கழிவறைகளுக்கான வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 May 2025 12:48 PM IST

வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தனி மனித வாழ்க்கை, குடும்பத்தின் மகிழ்ச்சி, செல்வ வளம் உள்ளிட்ட அனைத்திலும் வாஸ்துவானது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.வாஸ்து என்பதே நிலம் சார்ந்த விஷயம் என்றாலும் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள், அதன் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அதில் வாஸ்து சரியாக அமைந்து விட்டால் எந்த கவலையும் கிடையாது. மாறாக ஒரு சதவீதம் தவறாக அமைந்தாலும் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுதான் வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்படியான நிலையில் வீட்டின் மிக முக்கிய தேவையாக உள்ள கழிப்பறைகளுக்கான வாஸ்து விஷயங்கள் என்னவென்று நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

வேடிக்கையானது கிடையாது

கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கழிப்பறை அமைந்துள்ள இடம் தொடங்கி அங்கு பூசப்பட்டுள்ள வண்ணம் வரை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுவாக வீடு கட்டும் போது அதில் கழிப்பறைகளை அமைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். இடப்பற்றாக்குறை, சரியான திசை கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்கள் கழிவறைகள் அமையும் இடம் மாறுவதற்கான சூழலை உண்டாக்கும்.

முன்பு காலத்தில் கழிவறைகள் வீட்டின் பிரதான கட்டமைப்பிலிருந்து விலகி தனியாக ஒரு சிறிய அறையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அது மாறி வீடுகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அறையாகவே மாற்றப்பட்டது. கடைசியில் வீட்டிற்குள் கழிவறை இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே மாறிவிட்டது.

வாஸ்து சொல்வது என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் கழிவறையானது தென்மேற்கு திசையில் தான் இருக்க வேண்டும். இது சாஸ்திரத்தில் அகற்றல் மூலை என அழைக்கப்படுகிறது. இதனை தவிர்த்து வடமேற்கு திசையில் மேற்கு பக்கமாகவும், தென்கிழக்கு திசையில் கிழக்கு பக்கமாகவும் கழிவறைகளை நாம் அமைக்கலாம். இந்த திசைகளில் நாம் கழிவறை அமைத்தால் வீட்டில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தில் ஒரு பகுதி நிச்சயம் குறையும் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எந்த காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் கழிவறைகளை கட்டவே கூடாது. இந்த மூலை புனிதமான இடமாக கருதப்படுகிறது. ஒருவேளை தவறி இந்த திசையில் நீங்கள் கழிவறை அமைத்தால் அது வீட்டில் நேர்மறை ஆற்றலை சீர்குலைப்பதோடு உடல் நலம் மற்றும் மனம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிறங்களை பயன்படுத்தாதீர்கள்

பொதுவாக கழிவறைகளுக்கு கருப்பு, அடர் நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறங்களை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதே சமயம் வெள்ளை அல்லது பழுப்பு நிறங்கள் ஏற்றவை என சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் கழிப்பறையில் கோப்பைகள் வைக்கும் போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருப்பதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தெற்கு அல்லது வடக்கு திசை நோக்கி கழிவறையின் கோப்பையானது இருக்க வேண்டும் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை உபாதைக்காக பயன்படுத்தப்படும் கழிவறைகளில் இத்தகைய திசைகள் இயற்கை ஆற்றலுடன் ஒன்றிணைந்து உடல் நலத்தில் சமநிலை உணர்வை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. அதே சமயம் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் குழாய்களில் சிறிய அளவிலான கசிவுகள் இருந்தால் கூட அது வீட்டின் நிதி பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது எனவே இதனை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்னல் அமைப்பது அவசியம்

அது மட்டுமல்லாமல் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி கழிவறையில் பயன்படுத்தும் தண்ணீர் வடிகால் வசதியானது ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும். மேலும் கழிவறையில் காற்றோட்டம் செல்லும் படியான சிறிய அளவில் ஜன்னலை அமைக்கலாம். இதனால் கழிவறையில் ஏற்படும் துர்நாற்றங்கள், ஈரப்பதத்தினால் உருவாகும் அசுத்தங்கள் ஆகியவை அகன்று சுத்தமான மற்றும் புத்துணர்ச்சியிருக்கும் சூழல் உண்டாகும் என நம்பப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us