AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

3 ஆண்டுகளாக நடக்கும் ஊழல்.. தமிழக நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.74 கோடி முறைகேடு – அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Fake Book Scam: லஞ்ச ஒழிப்புத்துறையினர் விரிவான விசாரணை நடத்தி, நேற்று தெளிவான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். அந்த எஃப்.ஐ.ஆர். மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து மட்டுமே சுமார் ரூ.1.74 கோடி மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

3 ஆண்டுகளாக நடக்கும் ஊழல்.. தமிழக நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.74 கோடி முறைகேடு – அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2026 16:14 PM IST

நவம்பர் 17, 2026: தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், கடந்த மூன்று ஆண்டுகளில் புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் கைது

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அகல்விளக்கு பதிப்பகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமரா நூலகம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கும் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, உண்மையான எழுத்தாளர்கள் எழுதாத புத்தகங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி, அவற்றுக்குப் போலியான எழுத்தாளர் பெயர்களைச் சூட்டி நூலகங்களுக்கு விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அகல்விளக்கு பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1.74 கோடி மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல்

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழகத்தில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன.

பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, நாங்களும் அதிகாரிகளும் எங்களுடைய நண்பர்களும் பல்வேறு நூலகங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, இதுபோன்ற போலியான புத்தகங்கள் பல இடங்களில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தோம்.

மேலும் படிக்க: மக்கள் வரிப்பணத்தில் டெல்லி பயணமா? தவெக ஆட்சியில் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து.. திமுக விடுத்த எச்சரிக்கை!

லஞ்ச ஒழிப்புத்துறையினர் விரிவான விசாரணை நடத்தி, நேற்று தெளிவான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். அந்த எஃப்.ஐ.ஆர். மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து மட்டுமே சுமார் ரூ.1.74 கோடி மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக யாருடைய ஆட்சி நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் இந்த விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. ஆங்கிலப் புத்தகங்களின் பட்டியலை நாங்கள் இன்னும் விரிவாக ஆய்வு செய்யவில்லை. தமிழ்ப் புத்தகங்களிலேயே இவ்வளவு பெரிய தொகைக்கான முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கன்னிமரா நூலகத்தில் 523 போலி புத்தகங்கள்?

கன்னிமரா நூலகத்தில் மட்டும் 523 புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நிவேதா பால்ராஜ், சச்சின் உள்ளிட்ட பெயர்களில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் பெயர்களைப் பயன்படுத்தி புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான புத்தகங்களும் இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய முறைகேடுகள் குறித்து ஏன் திமுகவைச் சேர்ந்தவர்கள் பேச முன்வரவில்லை என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது

புத்தகக் கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. ஒருவரைக்கூட விடமாட்டோம். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் போலியான நூல்கள் எதுவும் கொள்முதல் செய்யப்படவில்லை. கடந்த ஆட்சியிலேயே புத்தகக் கொள்முதலுக்கான அனைத்து ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: நவம்பர் 20-ம் தேதி கரையை கடக்கும் அக்வான் புயல்.. வட கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலேயே முதல்முறையாக நூலகங்களில் உள்ள புத்தகங்களில்கூட ஊழல் நடைபெற்றுள்ளது. அதுவும் பெரியார் பெயரில் அமைக்கப்பட்ட நூலகத்தில் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

நூலகங்களில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்படும்

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடுகள் இனி தொடரக்கூடாது என்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, புத்தகக் கொள்முதலுக்குக் குழு அமைப்பது, தேர்வு செய்வதற்கான அளவுகோல்களை வலுப்படுத்துவது, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழக நூலகங்களில் இடம்பெற்றுள்ள போலியான புத்தகங்களை அடையாளம் கண்டு அகற்றி, மீண்டும் நூலகங்களின் தரத்தை உயர்த்தி, வாசகர்களுக்குத் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். தமிழக நூலகங்களுக்கு மீண்டும் வெளிச்சம் கொண்டுவருவதற்கான ஆரம்பப் புள்ளியாக அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் கைது நடவடிக்கை அமைந்துள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Follow Us