காலநிலை மாற்றம்: டெங்கு, மலேரியா நோய் அபாயம்.. லான்செட் அறிக்கை எச்சரிக்கை
Climate Change: காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரித்து, மக்களின் உடல்நலம் மற்றும் தூக்கம் பாதிக்கப்படுவதாக லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வெப்ப பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கைகள் தேவை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லான்செட் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. குறிப்பாக, அதிகரிக்கும் வெப்பநிலை, வெப்ப அலைகள், காற்று மாசுபாடு மற்றும் தொற்றுநோய்களின் பரவல் ஆகியவை (Climate Change Intensifies) மக்களின் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. 2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை நாட்களில் பாதியளவு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என 2026-ம் ஆண்டுக்கான லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது. வெப்ப அலைகளை முன்கூட்டியே கணித்து மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Also Read: குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
வெப்பத்தால் தூக்கமும் வேலைத்திறனும் பாதிப்பு
அதிக வெப்பநிலை காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைதல், மயக்கம், வெப்ப பக்கவாதம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்திய மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 2,600 மணி நேரத்திற்கும் மேலாக வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ளும் சூழல் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இரவு நேர வெப்பநிலை அதிகரிப்பதால் தூக்கமும் பாதிக்கப்படுகிறது. இதனால் 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 64 மணி நேரத் தூக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு, மலேரியா பரவும் அபாயம் அதிகரிப்பு
வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் அபாயமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெங்கு பரப்பும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்களின் நோய் பரவும் சாத்தியக்கூறு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 84 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், மலேரியா பரவுவதற்கு ஏற்ற காலநிலை நிலவும் மாதங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் நீர்வழித் தொற்றுகளை ஏற்படுத்தும் விப்ரியோ பாக்டீரியாக்களின் பரவலுக்கும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
வெப்பம் மட்டுமின்றி காட்டுத்தீயால் ஏற்படும் புகை மற்றும் காற்று மாசுபாடும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 2023-ம் ஆண்டில் இந்தியாவில் நுண்துகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய உயிரிழப்புகள் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து தூய்மையான எரிசக்திக்கு மாற வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
Also Read: குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?
சுகாதார பாதுகாப்பை மேம்படுத்த நிபுணர்கள் வலியுறுத்தல்
வெப்ப அலைகளை முன்கூட்டியே கணிப்பதுடன், அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளையும் கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு வழங்குவதுடன், மருத்துவமனைகளையும் வெப்பம் சார்ந்த அவசர சிகிச்சைகளுக்குத் தயார்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதும், பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதும் அவசியம் என லான்செட் அறிக்கை எச்சரிக்கிறது.