உட்கார்ந்து வேலை செய்பவரா? வால் எலும்பு வலியை விரட்ட எளிய வழி
Tailbone Pain: வால் எலும்புப் பகுதியில் ஏற்படும் 'காக்சிடினியா' வலி நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, திடீர் விபத்துகள் மற்றும் தவறான உடல் அசைவுகளால் உண்டாகிறது. இதனால் உட்கார்ந்து எழும்போதும், மலம் கழிக்கும்போதும் கடுமையான குத்து வலி ஏற்பட்டு அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடப்பது, சரியான இருக்கையைப் பயன்படுத்துவது மற்றும் உடல் எடையைச் சீராகப் பராமரிப்பது போன்ற எளிய முறைகள் மூலம் இந்த வலியைத் தடுத்து நலம் பெறலாம்.
தற்காலத்தில் கணினி முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து பணியாற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஓய்வின்றித் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் ஒருவிதக் கடுமையான வலி ஏற்படுவதுண்டு. மருத்துவ உலகில் ‘காக்சிடினியா’ (Coccydynia) என அழைக்கப்படும் இந்த வால் எலும்பு வலியானது, ஆரம்பத்தில் சாதாரண அசௌகரியமாகத் தோன்றினாலும், நாளடைவில் அன்றாடப் பணிகளைக்கூடச் செய்ய முடியாத அளவிற்குத் தீவிரமடையக்கூடும்.
Also Read: Office Sitting Tips: ஆபிஸ் சேரில் இப்படி உட்காருங்க.. முதுகு வலி வராமல் தடுக்குமா..?
வால் எலும்பு வலி ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்
நமது முதுகுத்தண்டின் இறுதி முனையில் அமைந்துள்ள சிறிய எலும்புப் பகுதியே வால் எலும்பாகும். கடினமான இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்வது, தவறிப் பின்புறமாகக் கீழே விழுந்து அடிபடுவது மற்றும் முதுகைக் கூன் போட்டுத் தவறான கோணத்தில் உட்காருவது போன்ற பழக்கங்கள் இப்பகுதியில் அதிகப்படியான அழுத்தத்தை உண்டாக்குகின்றன. மேலும், பெண்களுக்குக் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பிறகும் இடுப்பு எலும்புகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்த வலி தோன்றலாம். இதேபோல், முறையான இருக்கை வசதியின்றி நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், உடல் எடை மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக இருப்பவர்களுக்கும் வால் எலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் உராய்வு ஏற்பட்டு வீக்கமும் வலியும் உண்டாகிறது.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்
வால் எலும்புப் பகுதியில் பாதிப்பு ஏற்படும்போது, அவ்விடத்தில் ஊசியால் குத்துவது போன்ற கூர்மையான வலியோ அல்லது தொடர்ச்சியான மந்தமான வலியோ உணரப்படும். குறிப்பாக, நாற்காலியில் அமர்ந்திருந்து சட்டென்று எழுந்து நிற்கும்போது இந்த வலி உச்சத்தை அடையும். சிலருக்கு மலம் கழிக்கும்போதும், இயல்பான உடல் அசைவுகளின்போதும் கடும் சிரமம் ஏற்படலாம். இவற்றுடன் சேர்த்துக் கீழ் முதுகு வலி, நரம்பு இழுப்பு போன்ற உணர்வு மற்றும் இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க முடியாத நிலை போன்ற அறிகுறிகளும் தென்பட வாய்ப்புள்ளது.
Also Read: Office Sitting Tips: ஆபிஸ் சேரில் இப்படி உட்காருங்க.. முதுகு வலி வராமல் தடுக்குமா..?
வலியைத் தவிர்க்கும் எளிய தடுப்பு முறைகள்
இந்தப் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள அன்றாட வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்வது அவசியமாகும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சிறிது தூரம் நடப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அமரும்போது முதுகுத்தண்டிற்குச் சரியான பிடிமானம் கிடைக்கும்படியான நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பதும், வால் எலும்பிற்கு அழுத்தம் தராத பிரத்யேக மெத்தைகளைப் பயன்படுத்துவதும் சிறந்த பலனைத் தரும்.