Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: இதெல்லாம் கிஃப்ட் கொடுக்காதீங்க.. பணப் பிரச்னை வரலாம்!

வாஸ்து சாஸ்திரப்படி, சில பரிசுப் பொருட்களை வழங்குவது உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கருப்பு நிற ஆடைகள், வாசனை திரவியங்கள், பணப்பைகள், முத்து ஆபரணங்கள், மற்றும் கைக்குட்டைகள் போன்றவற்றை பரிசாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதனைப் பற்றிப் பார்க்கலாம்.

Vastu Tips: இதெல்லாம் கிஃப்ட் கொடுக்காதீங்க.. பணப் பிரச்னை வரலாம்!
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 May 2025 13:28 PM

பொதுவாக இந்து மதத்தில் ஜோதிடத்திற்கு (Astrology) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையும் 9 கிரகங்களில் நிலைகளை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் நம்பப்படுகிறது. இதற்கான நடைமுறைகளை சாஸ்திரங்களும் குறிப்பிட்டுள்ளது. இதே ஜோதிடத்தின் ஒரு பகுதியாக வாஸ்து சாஸ்திரமும் (Vastu Shastra) திகழ்கிறது. வாஸ்து என்பது நிலத்தை அடிப்படையாக கொண்டது என்பது நாம் அறிந்ததாகும். அப்படியான நிலையில் வீடு கட்டுவதற்கு முன்பு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில் வைப்பதற்கும் ஏற்றவாறு வாஸ்து விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இப்படியான வாஸ்து வீட்டின் நிறம் தொடங்கி நாம் அணியும் உடை வரை அனைத்திலும் இடத்திற்கு ஏற்றவாறு பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் எந்தவொரு புதிய பொருளையும் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் யாருக்கும் பரிசு பொருட்களை வழங்குவதற்கு முன்பும் நாம் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனைப் பற்றிக் காணலாம்.

உறவுகளில் தாக்கத்தை உண்டாக்கலாம்

பரிசுப் பொருட்கள் வழங்குவது என்பது அன்பின் வெளிப்பாடாகும். சிறப்பான தருணங்களில் பரிசுப் பொருட்களை வாங்குவதும், பெறுவதும் மிகச்சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை பரிசுகள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள். அவை சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். இது உறவுகளில் நேரடி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இதில் நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

நாம் பரிசு வாங்க கடைக்கு செல்கிறோம் என்றால் அங்கிருக்கும் கருப்பு நிறப் பொருட்கள் நமக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அழகாகவும் தோன்றும்.ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த நிறத்தில் உள்ள பொருட்களைப் பரிசாகக் கொடுக்கவே கூடாது என சொல்லப்பட்டுள்ளது. காரணம் வாஸ்து சாஸ்திரத்தின்படி, யார் ஒருவர் தனது நண்பருக்கு கருப்பு நிறத்தில் ஆடைகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் போன்ற பரிசு பொருட்களை வழங்குகிறார்களோ அவர்களது உறவில் விரிசல் விழும் என நம்பப்படுகிறது.

சில சமயங்களில் நாம் பரிசாக நறுமணமுள்ள வாசனை திரவியத்தைக் கொடுப்போம். இது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்றாலும் இதனை பரிசாக அளித்தால் நிதி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதேபோல் சிலர் பர்ஸ் உள்ளிட்ட பணம் வைக்கும் பொருட்களை வழங்குவார்கள். இத்தகைய பணப்பையை நண்பர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் பரிசாகக் கொடுக்கக்கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதுவும் நிதி சிக்கல்களை உண்டாக்ககூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஆபரணங்களில் ஒன்றான முத்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வெள்ளை நிறம் அனைவருக்கும் பிடிக்கும். இதை பரிசாக கொடுக்கக்கூடாது என்பதற்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. அதன்படி முத்துக்கள் கண்ணீரின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இதேபோல் அனைவரும் பயன்படுத்தும் பொருளான கைக்குட்டைகளை யாருக்கும் பரிசாகக் கொடுக்கக் கூடாது. இது ஜோதிடத்தில் அபசகுனமாகக் கருதப்படுகிறது. இது உறவுகளில் பிரிவை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)