AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நைவேத்தியமாக சுருட்டு.. அற்புதங்கள் நிறைந்த விராலிமலை முருகன்!

விராலிமலையில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய சண்முகநாதர் கோயில் வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கோயில் தினமும் மாலையில் சுருட்டு நைவேத்தியம் செய்யப்படும் சிறப்புமிக்க தலமாகும். வேடன் ஒருவனின் அனுபவத்தால் தோன்றிய இக்கோயில், அருணகிரிநாதருக்கும் முருகனுக்கும் இடையிலான பிணைப்பை கூறுகிறது.

நைவேத்தியமாக சுருட்டு.. அற்புதங்கள் நிறைந்த விராலிமலை முருகன்!
விராலிமலை முருகன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 May 2025 17:09 PM IST

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனான முருகப்பெருமான் இருப்பான் என்பது ஐதீகமாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரில் பல்வேறு பெயர்களில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான் அனைத்து ஊர்களிலும் மலை அல்லது குன்றின் மேல் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றான். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கோயில் கொண்டிருக்கும் சண்முகநாதர் ஆலயம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம். இக்கோயிலானது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலமாகும். இங்குள்ள முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். இந்த கோயிலானது தினமும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலின் சிறப்புகள் மற்றும் கோயில் உருவான வரலாறு, நேர்த்திக்கடன் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

இப்போது முருகன் கோயில் இருக்கும் இடத்தில் முன்பு குரா மரம் இருந்துள்ளது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வந்த நிலையில் அது இந்த மரத்தின் அருகில் வரும்போது காணாமல் போயுள்ளது. இதனால் இம்மரத்தில் இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. இதற்கிடையில் வயலூரில் இருந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் விராலிமலைக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார். அவரின் உத்தரவுப்படி விராலிமலைக்கு வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க, முருகப்பெருமான் வேடன் ரூபத்தில் வந்து விராலிமலைக்கு வழி சொல்லியுள்ளார். அருணகிரிநாதர் மலையை அடைந்த நிலையில் உடன் வந்த வேடன் காணாமல் போய்விடுகிறார். முருகனின் பக்தியில் அவர் மெய் சிலிர்த்தார்.

இந்த நிலையில் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அஷ்டமாசித்தியை வழங்கியது இத்தலத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் திருப்புகழில் 18 முறை இந்த கோயிலைப் பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கோயிலின் சிறப்புகள்

இந்த விராலி மலை  திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான சித்தர்கள் தவம் செய்த இடமாகும். மேலும் ஜனகர், செனந்தர், செனக்குமாரர், செனாதனார் என நால்வரும் தியானம் செய்த போது அவர்களுக்கு முருகப்பெருமான் நேரில் தோன்றி அருளாசி வழங்கிய திருத்தலமாக இந்த கோயில் சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் திருப்பணி நடந்த ஒரு காலத்தில் கருப்பு முத்து என்ற பக்தர் வேலை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது அருகில் இருந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் ஆற்றை கடக்க முடியாத சூழல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் முருகனை பிரார்த்தனை செய்தார். மேலும் குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்துள்ளார், அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இறக்கப்பட்ட கருப்பு முத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? என கேட்டுள்ளார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அந்த நபர் ஆற்றலை கடக்க கருப்பு முத்துவுக்கு உதவி செய்த பிறகு காணாமல் போய்விட்டார். கருப்பு முத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்த போது அவர் முன்னால் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் அவருக்கு அந்த உதவி செய்த நபர் முருகப்பெருமான் என்று புரிந்தது.

நைவேத்தியமாக சுருட்டு

இதனை அங்கிருந்தவர்களிடம் கூற அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்று முதல் மாலை வேளையில் பூஜையில் முருகனுக்கு சுருட்டு பிரசாதமாக படைக்கும் பழக்கம் உண்டானது. இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இதற்கு தடை விதித்த நிலையில் அவர் கனவில் தோன்றினார். அப்போது முருகன்,  “எனக்கு சுருட்டு படைப்பது என்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காக மட்டுமே, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல” என கூறினார்.

துன்பப்படும் ஒருவனுக்கு தன்னால் முடிந்த ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என்னுடைய பக்தன் விரும்பிய நிலையில் அதற்காகவே அந்த சுருட்டை தந்தான்.  அது தகுதி இல்லை என்றாலும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடர வேண்டும் தடை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். இதன் பிறகு இந்த பழக்கம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பதை காட்டிலும் பக்தியும் அன்பும் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதை இந்த நிகழ்வானது உணர்த்துகிறது.

கோயிலின் திருவிழாக்கள்

இந்த கோயிலில் உள்ள சண்முகநாதரை வழிபட்டால் மன அமைதி மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இக்கோயிலில் குழந்தையை முருகனிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கு பதிலாக தவிடை கொடுத்து குழந்தையை பெற்றுக் கொள்ளும் பழக்கம் உள்ளது. மேலும் உடல் நல பாதிப்பு, ஆயுள் விருத்தி ,கல்வி அறிவு, செல்வ வளம், விவசாய செழிப்பு ஆகிய பல பிரார்த்தனைகளுக்கும் பக்தர்கள் இந்த கோயிலில் வந்து வழிபடுகிறார்கள்.

மயில்கள் நிறைந்த இந்த மலை காண்பவர்களை அதிசயிக்கும் வைக்கும் அளவுக்கு அழகானது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசம், அருணகிரிநாதர் இசை விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் முருகனுக்கு உகந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)

Follow Us