விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய முருகன் கோயில்!
பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில், தென்காசி மாவட்டத்தில் அமைந்த இயற்கை சூழ்ந்த முருகன் கோயிலாகும். வேல் வழிபாட்டில் துவங்கி, கனவில் கண்ட தரிசனத்தின் பின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 544 படிகள் ஏறி அடையக்கூடிய இக்கோயில், அற்புதமான இயற்கை அழகை நாம் ரசிக்கலாம்.

பொதுவாக தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு பல இடங்களில் பல்வேறு பெயர்களில் கோயில்கள் உள்ளது. மலையாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, ஆறாக இருந்தாலும் சரி அங்கு முருகன் இருப்பான் என்பதற்கு சான்றாக பலவிதமான கோயில்களை நாம் இன்றும் காணலாம். இப்படியான நிலையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடைப்பட்ட வழியில் அமைந்திருக்கும் இந்த பண்பொழி கிராமத்தில் மலை மீது முருகன் வீற்றிருக்கிறார். சரியாக செங்கோட்டையிலிருந்து வட மேற்கு திசையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயிலை நாம் அடையலாம்.
தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. அதேபோல் திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் சேவையும் உள்ளதால் அதிக அளவிலான பக்தர்கள் இந்த கோயிலுக்கு தினம்தோறும் வருகை தருகின்றனர். இந்தக் கோயிலானது காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயில் உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்
கோயில் உருவான வரலாறு
இந்த திருமலை கோயிலில் ஒரு காலத்தில் வேல் மட்டுமே வழிபாட்டு கருவாக இருந்தது. இங்கு பணியாற்றி வந்த பூவன் பட்டர் தினமும் அந்த வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்து வந்தார். அப்படியான நிலையில் ஒருநாள் பகல் பூஜை முடித்துவிட்டு அங்கிருந்த ஒரு புளிய மரத்தடியில் ஓய்வுக்காக அவர் படுத்திருந்தார்.
அப்போது முருகப்பெருமான் அவரது கனவில் வந்தார். “அர்ச்சகரே! இந்த மலை எனக்கு சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் கோட்டை திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருப்பேன். நீங்கள் அங்கு சென்று எறும்புகள் சார சாரையாக செல்லும் ஒரு குழியைப் பார்ப்பாய். அதனைத் தோண்டி பார்க்க வேண்டும். அதற்குள் நான் சிலையாக இருப்பேன். என்னை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்” எனக் கூறினார்.
இதனைக் கேட்டு திடுக்கிட்ட பூவன் பட்டர் நேரடியாக அரசரிடம் தகவல் தெரிவிக்க அப்படியே அந்த சிலை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுவாக பகலில் கனவு கண்டால் பலிக்காது என்ற எண்ணம் நம் அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் முருகனை நம்புவோருக்கு எந்த நேரம் கனவு கண்டாலும் அது பலித்து விடும் என்பதற்கு சான்றாக இந்த கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள்
மலை மீது அமைந்திருக்கும் இந்த கோயிலை முதல் முறையாக சென்று பார்ப்பவர்களுக்கு மிகவும் மனம் கவர்ந்த இடமாக மாறிவிடும் அளவுக்கு ஒரு அற்புதமான இயற்கை எழில் நிறைந்த திருக்கோயிலாக திருமலை குமாரசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் திருப்பணி காலத்தில் கல் தூண்களை சுமந்து செல்வதற்கு யானைகள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது சிவகாமி அம்மையார் என்ற துறவி தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா என்ற நாமத்தை கூறிக்கொண்டு கயிறிலிருந்து அறுந்து விழும் கல் தூண்களைத் தாங்கி பலரையும் அதிசயிக்க வைத்த சம்பவமும் நடைபெற்று உள்ளது. அது மட்டுமல்லாமல் செங்கல்களை வாழை மட்டைகளில் ஏற்றி மலை உச்சிக்கு இழுத்துச் சென்று திருப்பணியும் செய்துள்ளனர்.
மூக்கன் என்ற பெயருக்கு காரணம்
பொதுவாக தென் மாவட்டங்களில் சிலரின் பெயர் மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என சூட்டப்பட்டிருக்கும். இதற்கான காரணம் பூவன் பட்டர் அந்த சிலையை எடுப்பதற்காக கடப்பாரையை விட்டு தோண்டியபோது அது சிலையின் மூக்கில் பட்டு சிறிது உடைந்தது. ஆனால் அந்த உடைசல் கூட பார்ப்பதற்காக அழகாக இருந்த நிலையில் கிராம மக்கள் முருகன் என சொல்வதற்கு பதிலாக மூக்கன் என பெயரிட்டார்கள். அப்படியாக அந்தப் பெயரையும் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் வைத்தார்கள்.
குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து மரணிக்கும் போது மூன்றாவதாக பிறக்கும் குழந்தை பிழைக்க வேண்டும் என தென் மாவட்டங்களில் அந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொள்வார்கள். பள்ளிக்காலம் வரை அந்த குழந்தைகள் அந்த மூக்குத்தியுடன் வலம் வருவதை பார்த்திருக்கலாம்.
544 படிகள் ஏறி அடைய வேண்டும்
பந்தள மன்னர் கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலை கட்டியதுதான் பலருக்கும் தெரியும். ஆனால் அந்த மன்னர் தான் திருமலை குமாரசுவாமி கோயில் கட்டுவதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்த ஊரை சுற்றி சில மைல் தூரத்தில் தான் அச்சங்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை ஆகிய ஐயப்பன் கோயில்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
500 அடி உயரம் உடைய திருமலை குமாரசுவாமி கோயிலின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் 544 படிகள் ஏறி அடைய வேண்டும். இந்த மலைப்பாதையில் தொடக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. அவரை வணங்கி விட்டு படியேறலாம். தற்போது மேலே வரை வாகனங்களில் செல்வதற்கு பாதையும் அமைக்கப்பட்டு விட்டது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான கோயில்
பொதுவாக சப்த கன்னியர்கள் சிலையானது சிவ ஆலயங்களில் மட்டுமே இருக்கக்கூடியதாகும். ஆனால் இந்த முருகன் கோயிலில் உள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியருக்கு சிலை இருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலுக்கு வாழ்க்கை முழுவதும் செல்ல வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முருகனுக்குரிய நட்சத்திரங்களாக குறிப்பிடப்படும் விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடலாம். விசாகம் என்பதற்கு வி என்றால் மேலானது என்றும் சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும்.
இந்த கோயிலில் மலை உச்சியில் 16 கல் படிகள் கொண்ட ஒரு பிள்ளையார் சன்னதி உள்ளது. 16 படிகள் ஏறி அவரை வழிபடுவதால் 16 வகையான செல்வம் பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.