Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செவ்வாய் கிரகத்தால் ஜாதகத்தில் பிரச்னையா? – இந்த கோயில் போங்க!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில், நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்திற்குரிய ஆலயமாக பார்க்கப்படுகிறது. முனிவர், ராஜகுமாரன் மற்றும் பாம்பு தொடர்பான புராணக்கதை இக்கோயிலின் தோற்றத்துடன் தொடர்புடையதாகும். கோயிலின் தனித்துவமான அமைப்பு, வழிபாட்டு முறைகள் பற்றி நாம் காணலாம்.

செவ்வாய் கிரகத்தால் ஜாதகத்தில் பிரச்னையா? – இந்த கோயில் போங்க!
கைலாசநாதர் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Jun 2025 11:17 AM IST

9 கிரகங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாக பாய்ந்து கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் கோயில்களாக அமைக்கப்பட்டு அங்கு வழிபாடானது நடத்தப்பட்டு வருகிறது. அதில் சூரிய பகவான் தலமாக பாபநாசம் பாபநாதர் சுவாமி கோயிலும், சந்திரன் தலமாக சேரன்மகாதேவியில் உள்ள அம்மநாதர் ஆலயமும் உள்ளது. இப்படியான நிலையில் நவக்கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் செவ்வாய் தலமாக கோடகநல்லூரில் இருக்கும் கைலாசநாத நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் உருவான கதை, அந்த கோயிலின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நாம் காணலாம். இக்கோயிலானது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முனிவர் இந்த பகுதியில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக மகன் இருந்த நிலையில் ஒரு நாள் விறகு எடுப்பதற்காக அவன் காட்டிற்குள் சென்று விட்டான். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த ராஜகுமாரன் ஒருவன் ராஜ்ஜிய அபிவிருத்தி யாகம் செய்ய வேண்டும் என நினைத்து தவம் செய்து கொண்டிருந்த முனிவரை எழுப்ப முயன்றான். அவரிடம் யாகம் பற்றி கேட்கலாம் என நினைத்த இளவரசனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எவ்வளவோ முயற்சித்தும் முனிவர் தவத்திலிருந்து எழ மறுத்து விட்ட நிலையில் அங்கே கிடந்த ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டு விட்டு ராஜகுமாரன் சென்று விட்டான். இதற்கிடையில் விறகு எடுக்க சென்ற மகன் திரும்பி வந்து தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதை கண்டு கடும் கோபமடைந்தான். மேலும் இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என தெரிந்ததும் நேராக அரண்மனைக்கு சென்று என் தந்தையின் கழுத்தில் கிடந்த இறந்த பாம்பு உயிர் பெற்று உன் தந்தையை தீண்டும் என சாபமிட்டு வந்து விட்டான்.

இதனைத் தொடர்ந்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாக ராஜகுமாரனிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாம்பிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள மிகவும் மறைவான இடத்தில் மகாராஜா மண்டபம் கட்டி வசித்து வந்தார். அங்கே ஒரு எறும்பு கூட செல்வதற்கு வழி கிடையாது. இப்படியான நிலையில் ஒருநாள் மாம்பழம் சாப்பிடும் போது அதன் உள்ளே குட்டியாக ஒளிந்து இருந்த பாம்பு ராஜாவை தீண்டியதில் அவர் உயிரிழந்தார்.

இந்தப் பாவம் தன்னை நீங்க வேண்டும் என அந்த பாம்பு விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது அவர் சிவபெருமானை வழிபட்டால் மட்டுமே பாவம் நீங்கும் என பரிகாரம் சொன்னார். இதனை தொடர்ந்து பாம்பு சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்குவதற்காக கைலாயத்திலிருந்து சிவபெருமான் வந்ததால் இந்த கோயில் கைலாசநாதர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் கைலாசநாதரும் சிவகாமி அம்மையாரும் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

கோயிலின் சிறப்புகள்

இந்த கைலாசநாதர் கோயிலில் கொடிமரம், பலி பீடம், பரிவார மூர்த்திகள் என எதுவுமே கிடையாது மேலும் துவார பாலகர்கள் இருக்கும் இடத்தில் கல்யாண விநாயகர், முருகனும் அருள் பாலிக்குகின்றனர். நவகைலாயங்களில் பெரிய அளவிலான மூர்த்தி இவர் ஆவார். அதனால் இவருக்கு எட்டு முழத்தில் எட்டு வேட்டிகள் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அதே போல் சுவாமிக்கு துவரம் பருப்பு பிரசாதமாக வைத்து சிவப்பு வஸ்திரம் அணிந்து வழிபடும்போது செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் இந்த கோயிலில் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அனந்த கௌரி சிலையும் உள்ளது. திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இந்த கோயிலில் அமைந்திருக்கும் நந்தி பெருமானுக்கு  58 விரலி மஞ்சள் தாளிக்கயிறு கட்டி மாலையாக அணிவித்து வழிபட்டால் விரைவில் விரும்பியபடி திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது.

மனிதர்களின் வாழ்க்கையில் செவ்வாய் திசையானது ஏழு ஆண்டுகள் நடக்கும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏழு ஆண்டுகளும் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும். சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளதாகவும், பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்க தாமதமாகும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.

(இந்த கைலாசநாதர் கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)