திருமண தடை நீக்கும் சாஸ்தா கோயில்.. எங்கே இருக்கிறது தெரியுமா?
சாத்தமங்கலம் சாஸ்தா கோவில், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. திருடர்களின் தொல்லை நீங்க சாஸ்தாவை வழிபட்டதன் விளைவாக உருவான கோவில் இது. பூரண புஷ்கலை சமேத ஹரிஹர புத்திரர் சிலை, ஒரே கல்லில் செய்யப்பட்டது. வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்து மதத்தில் வழிபடக்கூடிய தெய்வங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒருவராக பார்க்கப்படுபவர் ஐயப்பன். மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் மகனாகப் பிறந்த ஐயப்பன் பார்வதி தேவியால் வளர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐயப்ப சுவாமி என்றாலே நாம் அனைவரின் மனதிற்கும் முதலில் வரும் வழிபாடு காலம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஆகும். அதே சமயம் தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் ஐயப்பனுக்கு என ஒவ்வொரு கோயில்களிலும் தனி சன்னதியும், சில இடங்களில் தனியாக கோயில்களிலும் அவர் அருள் பாலித்து வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே இருக்கும் சாஸ்தா கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த கோயில் ஆனது பக்தர்களின் தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தினந்தோறும் வருகை தருவதால் எப்போதும் மக்கள் கூட்டம்தான் இந்த கோயில் நிறைந்து காணப்படும்.
கோயில் உருவான வரலாறு
கடலூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு காலத்தில் வசித்து வந்த பொதுமக்களுக்கு திருடர்களால் மிகவும் தொந்தரவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கவலைப்பட்ட அவர்கள் காவல் தெய்வமான சாஸ்தாவை வழிபட விரும்பி உள்ளனர். அதன் அடிப்படையில் பூரண, புஷ்கல தேவியுடன் ஹரிஹர புத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து திருடர்களின் தொந்தரவு நீங்கியது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் கோயிலுக்குள் நுழைந்த திருடர்கள் பூரண புஷ்கலையுடன் சேர்த்து ஹரிஹர புத்திரரின் ஐம்பொன் சிலைகளையும் திருடி சென்றனர். அதன் பிறகு யாரால் இந்த சிலைகள் திருடப்பட்டதோ அவர்களை மீண்டும் இந்த கோயில் வைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள ஐயப்பன் கையில் இருக்கும் சாட்டை திருடர்கள் மற்றும் எதிரிகளுக்கு பதில் கொடுக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோயிலின் சிறப்புகள்
இக்கோயிலில் அருள் பாலிக்கும் பூரண புஷ்கலை சமேத ஹரிஹர புத்திரர் சிலை தனித்தனி திருமேனிகளுடன் இருந்தாலும் ஒரே கல்லில் செய்யப்பட்டது என்பது சிறப்பானதாகும். அதே சமயம் இந்த கல்லை தட்டினால் வித்தியாசமான சத்தத்தை உணரலாம் என சொல்லப்படுகிறது. இந்த சாஸ்தாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் எனப்படும் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கொடியேற்றம் தொடங்கி 10 நாட்களும் தினமும் காலை மாலை இரு வேலைகளிலும் சாமி வீதி உலா வரும்.
ஒன்பதாம் நாள் திருவிழாவில் தேரோட்டமும், பத்தாம் நாளில் பகலில் அருகில் இருக்கும் வெள்ளாற்றில் தீர்த்த வாரியும், இரவில் சாஸ்தாவுக்கு பூரண புஷ்கலையுடன் திருக்கல்யாணமும் மிகச் சிறப்பாக நடைபெறும். அதற்கு மறுநாள் புஷ்ப பல்லாக்கு நிகழ்வு இருக்கும்.
இந்த திருவிழாவில் பல்வேறு ஊர்களிலிருந்தும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் வந்து சாஸ்தாவிற்கு இசை அஞ்சலி செலுத்துவது மிகவும் விசேஷமான ஒன்றாகும். கல்யாண வரதர் என பெயர் கொண்டிருக்கும் இந்த சாஸ்தாவை வணங்கினால் திருமண தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதே சமயம் கையில் சாட்டையுடன் இருப்பதால் எதிரிகளிடமிருந்து நம்மை காப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த சாத்தமங்கலம் சாஸ்தா கோயிலில் யானை வாகனமாக உள்ளது. சாஸ்தா சன்னதிக்கு நேர் எதிராக மிகப்பெரிய நந்தி ஒன்று உள்ளது. இதற்காக தனி மண்டபமும் கட்டப்பட்டிருக்கிறது. சாஸ்தா கோயிலில் நந்தி இருப்பது எங்கும் காண முடியாத ஒரு சிறப்பாகும். அதேபோல் அய்யனார் கோயிலுக்குரிய விதத்தில் சுமார் 10 அடி உயரம் கொண்ட நான்கு குதிரை சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கும். வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
(கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)