AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Lord Murugan: நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள சதுர்முக முருகன் கோயிலின் வரலாறு விசுவாமித்திரரின் தவத்தின் விளைவாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் மூலவராக வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோயிலின் அமைப்பு, சிறப்பு வழிபாடுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் பற்றி காணலாம்.

Lord Murugan: நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?
நான்முக முருகன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Jun 2025 11:19 AM IST

தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு ஊரெல்லாம் கோயில் உள்ளது. பாலக பருவம் தொடங்கி போரிட்டது வரை பல்வேறு காலக்கட்டங்களுக்கும் ஏற்றவாறு வரலாறு கொண்ட கோயில் உள்ளது. சமீபகாலமாக முருகன் நம்முடைய துன்பத்தை போக்குபவன் என்ற நம்பிக்கையில் அவருக்கென ஒரு பக்தர் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அருள்பாலித்து வரும் சதுர்முக முருகன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இக்கோயிலானது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னாளப்பட்டியில் உள்ளது. பண்டைய காலத்தில் சின்னாள்பட்டி என இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. அப்படியான சதுர்முக முருகன் கோயில் உருவான வரலாறு பற்றி அறிவோம்.

கோயில் உருவான வரலாறு

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டத்தை பெறவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன்பு தோன்றிய ஈசன் இதற்கான வழிமுறைகளை உனக்கு பால திரிபுரசுந்தரி மட்டுமே சொல்வதற்கு தகுதியானவள் என கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பால திரிபுர சுந்தரியை நினைத்து தவம் செய்யும் விசுவாமித்திரர் முன் சலங்கை ஒலி எழ ஒரு சிறுமி வந்து நிற்கிறாள். அவளைப் பார்த்ததுமே விசுவாமித்திரருக்கு வந்தது பால திரிபுரசுந்தரி என்பது புரிந்து விட்டது.

பிரம்மரிஷி பட்டத்திற்காக இப்படி உடலை வருத்திக் கொண்ட நீ அதனை பெறுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது என அவள் கூற, என்ன செய்ய வேண்டும் என விசுவாமித்திரர் கேட்கிறார். ஒன்றும் கிடையாது நீ எனக்கு ஒரு குங்குமப்பொட்டு வை. அதன் பலனாக உனக்கு அந்த பட்டம் கிடைத்து விடும் என பாலதிரிபுரசுந்தரி கூறுகிறாள். விசுவாமித்திரரும் சிவனின் வழிகாட்டுதலின்படி குங்குமம் தயாரித்து அதனை அவள் திருமுகத்தில் திலகமாக இடுகிறார்.

இது சரியாக இருக்கிறதா என அருகில் இருந்த குளத்து நீரில் அச்சிறுமி முகம் பார்க்க நெற்றியில் இருந்து குங்குமப்பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தது. அடுத்த நொடியே குளத்திலிருந்து தெய்வீகம் ஒளிபொருந்திய முகம் ஒன்று தோன்றியது. அதனைக் கண்டு விசுவாமித்திரர் வணங்கிய நிலையில் அடுத்தடுத்து அதேபோல மேலும் மூன்று முகங்கள் தோன்றியது.

நான்முக முருகன் தோன்றிய கதை

இந்த நான்கு முகங்களுடன் கூடிய உருவம் திரிபுரசுந்தரியை வணங்க அவள் நான்முக முருகா வருக வருக என வரவேற்கிறாள்.இதனைக் கண்டு பரவசம் அடைந்த விசுவாமித்திரர் கந்தா கதிர்வேலா என முருகப்பெருமானை துதித்து பாடி பரவசமானார். தொடர்ந்து பால திரிபுரசுந்தரி விசுவாமித்திரரிடம், அன்று ஈசன் என்னுடைய துணையின்றி ஆறுமுகனை படைத்தார். இன்று நான் அவரது துணையின்றி நான்முக முருகனைப் படைத்தேன். இவனே நீ வேண்டும் வரத்தினை தருவான் எனக் கூறி மறைந்தாள்.

நான்முக முருகனிடம் பணிந்த விசுவாமித்திரருக்கு உள்ளத்தில் இருந்த தான் என்ற அகந்தை ஒழியத் தொடங்கியது. அப்போது கொஞ்சம் தொலைவில் கல் மழை பெய்ய தொடங்கிய நிலையில் அதனை கைகாட்டி அங்கே வந்தால் உனக்கு தேவையானவற்றை நான் தருவேன் என கூறி நான்முக முருகன் மறைந்தான். விசுவாமித்திரரும் அதன்படி சென்ற நிலையில் அங்கு நான்முக முருகனும் பாலசுந்தரியும் ஒன்றாக அவருக்கு காட்சி கொடுத்தார்கள். இறையருளை பெற தவம் செய்யாமல் எதையோ பெறுவதற்கு தான் தவம் செய்து விட்டேனே என தவறுகளை உணர்ந்து விசுவாமித்திரர் வருந்தினர்.

இதற்கிடையில் சற்று தொலைவில் இருந்து பிரம்மரிஷி விசுவாமித்திரரே என வசிஷ்டர் அவரை அழைத்த குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றார். எப்போது தான் என்ற அகந்தை ஒழிந்ததோ அப்போதோ நீ வந்து பிரம்மரிஷி ஆகிவிட்டாய்  என வசிஷ்டர் சொல்ல விசுவாமித்திரர் மகிழ்ச்சி அடைந்தார். அங்கு திண்டு திண்டாக கல் மழை பெய்ததால் இந்த இடம் திண்டுக்கல் என அழைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கல் மழை பெய்த இடத்திற்கு சிறுவன் ஒருவன் (சின்ன ஆள்) வழிகாட்டியதால் இந்த இடம் சின்னாளப்பட்டி என அழைக்கப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள் 

இந்த கோயிலில் மூலவராக வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி காட்சியளிக்கிறார். இதைக் காண கண் கோடி வேண்டும் என பக்தர்கள் சொல்கிறார்கள். அதனை தவிர்த்து பிரகாரத்தில் தண்டபாணி, விநாயகர், குக்கூட சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர்,  பாலசுப்பிரமணியர் நவகிரக சன்னதி ஆகியவை உள்ளது. நான்கு முகங்களுடன் இருக்கும் முருகனை தரிசிப்பது இங்கு மட்டும்தான் என்பது மிகவும் விசேஷமான செயலாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என முருகனை சொல்வார்கள். அப்படிப்பட்ட ஞான குருவாக இந்த கோயிலில் திகழ்கிறார் முருகன்.

இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் பாலும் குங்குமமும் கலந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும், எதிரிகள் பயம் விலகும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் கிருத்திகை நாளில் இக்கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் கேட்டதை எல்லாம் முருகன் கொடுப்பார் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. நான்முக முருகனுடன் காட்சி கொடுத்த பால திரிபுர சுந்தரிக்கு இந்த கோயிலில் தனி சன்னதி உள்ளது விசேஷமாகும்.

அம்பாளுக்கு புடவை சாற்றி செவ்வரளி மலர்கள் சூடி வழிபட்டால் கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி பெறலாம் என நம்பப்படுகிறது. இக்கோவிலானது காலையில் 7 மணி முதல் காலை 11  மணி வரையும் மாலையில் 5  மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

(இந்தக்கட்டுரை ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் பற்றி சொல்லப்படும் வரலாறுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us